×

ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக வாக்குறுதி: அசாம் பாஜ முதல்வருக்கு எதிராக தேர்தல் ஆணையரிடம் புகார்

கவுகாத்தி: ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கிலும் தலா ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா மீது நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் எம்பி புகார் அளித்துள்ளார். அசாம் மாநிலம் நாகோன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் எம்பியுமான பிரத்யூத் போர்டுலோய் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், லக்கிம்பூர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஹிமந்தா மக்களவை தேர்தல் முடிந்ததும் ரேஷன்கார்டுகள் வைத்துள்ளவர்களின் வங்கி கணக்கில் ரூ.10,000 போடப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதோடு,பணம் கொடுத்து வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாகும். எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் முழுமையாக விசாரித்து முதல்வரின் ஒழுங்கீனமற்ற செயல்பாடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையருக்கு அவர் அனுப்பியுள்ள இன்னொரு புகாரில், மக்களின் சமூக பொருளாதார நிலைமை குறித்து மாநில அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக வாக்குறுதி: அசாம் பாஜ முதல்வருக்கு எதிராக தேர்தல் ஆணையரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Assam BJP ,Chief Minister ,Guwahati ,Congress ,Chief Election Commissioner ,Assam ,Himanta Biswa ,Nagaon Constituency ,Assam State ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தனது...