×

பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய போலி நிறுவனங்கள் மூலம் பாஜவுக்கு ₹103 கோடி நன்கொடை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பே-பிஎம் ஊழலில் புதிய தகவல் வெளியாகி இருப்பதாகவும், புதிதாக தொடங்கப்பட்ட 20 போலி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் மூலம் பாஜவுக்கு ரூ.103 கோடி நன்கொடை கொடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான ஆய்வு செய்தியை அடிப்படையாக வைத்து நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பே-பிஎம் ஊழலான தேர்தல் பத்திரம் முறைகேடு பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊழல் 4 விதமாக நடந்திருக்கிறது. 1. தொழில் செய்ய வேண்டுமா, நன்கொடை கொடு, 2. ஒப்பந்தம் வேணுமா, நன்கொடை கொடு, 3. ஈடி, சிபிஐ மூலம் மிரட்டி நன்கொடை வசூல், 4. போலி நிறுவனங்கள் மூலம் நன்கொடை வசூல். இவற்றில் தற்போது போலி நிறுவனங்கள் மூலம் நடந்த தேர்தல் பத்திர ஊழல் தொடர்பான புதிய சங்கதி வெளியாகி இருக்கிறது.

அதாவது, புதிதாக தொடங்கப்பட்ட 20 நிறுவனங்கள் மூலம் பாஜ ரூ.103 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான விதிமுறையின்படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் ஆன நிறுவனங்கள் மட்டும் நன்கொடை வழங்க முடியும். ஆனால், இந்த விதிமுறையை நேரடியாக மீறி, தொடங்கப்பட்ட 3 ஆண்டிற்குள் நிறுவனங்கள் நன்கொடை தந்துள்ளன.

மேலும், முந்தைய 3 ஆண்டில் சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவீதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையாக தர வேண்டுமென்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் நன்கொடை தரப்படக் கூடாது என்பதற்காகவே 3 ஆண்டு அனுபவமுள்ள நிறுவனங்கள் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது. இந்த கடைசி பாதுகாப்பும், மோடியின் நேரடி பார்வையின் கீழ் மீறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறி உள்ளார்.

The post பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய போலி நிறுவனங்கள் மூலம் பாஜவுக்கு ₹103 கோடி நன்கொடை: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PAY- ,BAJA ,CONGRESS ,New Delhi ,Pay-PM scandal ,BJP ,General Secretary ,Jairam Ramesh ,Pay-PM ,Bajaj ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...