×

சத்தம் இல்லாமல் மோடி அரசு நடவடிக்கை;சைனிக் பள்ளிகள் தனியார்மயமாகிறது: தடுத்து நிறுத்த ஜனாதிபதிக்கு கார்கே அவசர கடிதம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவசரமாக எழுதிய 2 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய ஜனநாயகம் நமது ஆயுதப்படைகளை எந்த ஒரு பாகுபாடான அரசியலிலிருந்தும் விலக்கி வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த காலங்களில் அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகள் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களின் நிழல்களிலிருந்து ஆயுதப் படைகளையும் அதன் துணை நிறுவனங்களையும் விலக்கி வைத்தன.

இந்த தெளிவான பகிர்வு என்பது மிக உயர்ந்த ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மற்றும் சர்வதேச அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையை நீங்கள் பாராட்டுவீர்கள். உலகெங்கிலும் உள்ள ஆட்சிகள் ராணுவத் தலையீடு, ஜனநாயகத்தை சீர்குலைத்தல் மற்றும் ராணுவச் சட்டத்தின் கீழ் வீழ்ந்தபோதும், நமது ஜனநாயகம் வலுவாக இருந்தது. இந்தச் சூழலில், ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கையால் சைனிக் பள்ளிகள் தனியார்மயமாக்கப்படுகின்றன என்றும், இப்போது இவற்றில் 62% பள்ளிகள் பாஜ-ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு சொந்தமாக உள்ளன என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலில் தெரிய வந்துள்ளது.

நமது நாட்டில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. இவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் இயங்கும் முழு அரசு நிதியுதவி பெற்ற நிறுவனங்கள். 2021ல் சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு துணிச்சலாகத் தொடங்கியது. இதன் விளைவாக 100 புதிய பள்ளிகளில் 40 பள்ளிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு 50% கட்டணத்தின் வருடாந்திர கட்டண ஆதரவை வழங்குகிறது. ஆண்டுக்கு 50 சதவீத மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.40000 வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, மெரிட்அடிப்படையில் சலுகை வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, அதாவது 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளைக் கொண்ட ஒரு பள்ளிக்கு, மற்ற ஊக்கத்தொகைகளுடன் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.2 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்குகிறது.

தற்போது இந்த 40 பள்ளிகளில் 62% ஆர்எஸ்எஸ், பா.ஜ சங்பரிவார் அமைப்பை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுடன் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மாநில முதல்வரின் குடும்பம், பல எம்.எல்.ஏ.க்கள், பாஜ நிர்வாகிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சைனிக் பள்ளியை நடத்துவது தெரிய வந்துள்ளது.

சைனிக் பள்ளி தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமிக்கு வீரர்களை அனுப்புவதில் முன்னணி பங்கு வகிக்கும் ஒரு ஆயத்த தளமாகும். 1961ல் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பள்ளிகள் அன்றிலிருந்து ராணுவத் தலைமை மற்றும் சிறப்பின் கலங்கரை விளக்கமாக இருந்து வருகின்றன. அந்த பள்ளிகளில் ஆர்எஸ்எஸ், பா.ஜவினர் நுழைவது ஆயுதப் படைகளை கருத்தியல் ரீதியாகப் போதிக்க இது மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விைய எழுப்பி உள்ளது. இதுவரை இந்த நடவடிக்கையை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யவில்லை. ஏனெனில் நமது ஆயுதப் படைகளின் வீரத்தையும், தைரியத்தையும் கட்சி அரசியலில் இருந்து விலக்கி வைக்க தேசிய ஒருமித்த கருத்து உள்ளது.

இதை ஒன்றிய அரசு உடைத்ததில் ஆச்சரியமில்லை. நாட்டின் சுதந்திர அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அவசர அவசரமாகத் திணிக்கும் பெரும் திட்டத்தில், ஆயுதப் படைகளின் இயல்பு மற்றும் நெறிமுறைகளையும் மாற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை சைனிக் பள்ளிகளின் தேசியத் தன்மையையும் சேதப்படுத்தும். எனவே, தேசிய நலன் கருதி, இந்த தனியார்மயமாக்கல் கொள்கையை முழுமையாக திரும்பப் பெறவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சத்தம் இல்லாமல் மோடி அரசு நடவடிக்கை;சைனிக் பள்ளிகள் தனியார்மயமாகிறது: தடுத்து நிறுத்த ஜனாதிபதிக்கு கார்கே அவசர கடிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Sainik ,President ,New Delhi ,Mallikarjuna Kharge ,Thirupati Murmu ,Union government ,Congress ,Drabupati Murmu ,Modi government ,Kharge ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...