×

பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தீவிரம்: கை கொடுத்து கலெக்டர் வாழ்த்து

பூந்தமல்லி, ஏப். 11: பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளபட்டுள்ள நிலையில், தபால் வாக்கு அளித்த மாற்றுத்திறனாளிகளின் கைகளை குலுக்கி கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டுகள் பெறும் பணி முதல் கட்டமாக நேற்று தொடங்கியது. இதில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 677 பேரும், மாற்றுத்திறனாளிகள் 336 பேர் என மொத்தம் 1,013 நபர்களிடமிருந்து தபால் ஓட்டுகள் பெறப்பட உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பாரிவாக்கம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியிடம் தபால் வாக்குகள் பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை சேகரித்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் ஆர்வத்துடன் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனர். அப்போது, தபால் வாக்கு பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாம் கட்ட தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி வரும் 15ம் தேதி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பூந்தமல்லியில் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தீவிரம்: கை கொடுத்து கலெக்டர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Tamil Nadu ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்