வேலூர், ஏப்.11: கோடைக்காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தாது உப்பு இழப்பை தவிர்க்க அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ‘ஓஆர்எஸ்’ கரைசல் கார்னரை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சில மாவட்டங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, கோடைக்காலத்தில் பொதுமக்கள் வீடுகளில் இருக்கும்போதும், வெளியில் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் போதும் சரி, வியர்வையின் மூலம் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
குறிப்பாக வெளியில் நடமாடும், நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், சுரங்கத்தொழிலாளர்கள், குவாரி தொழிலாளர்கள், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், விவசாயிகள், அன்றாடம் பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்கும் மக்கள், கூரியர் சர்வீஸில் வேலை செய்யும் பணியாளர்கள், ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருட்கள் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள், போக்குவரத்து போலீசார், தீயணைப்புத்துறையினர் போன்றோர் இந்த கோடைக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதேபோல் கர்ப்பிணிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள், நோய் பாதித்த குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் இந்த கோடையில் வெளியில் செல்வதை தவிர்த்து மிக கவனமுடன் இருக்க வேண்டும். மேற்கண்ட அனைவரும் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். வெளியில் செல்லும்போது தண்ணீர் கேன்களை கொண்டு செல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஓஆர்எஸ் கரைசல் என்ற உப்புக்கரைசலை பருக வேண்டும். இத்திரவம் வியர்வை சுரப்பதால் ஏற்படும் தாது உப்பு இழப்பை சரி செய்வதற்கான சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவுடன் கூடிய கரைசலாகும்.
இந்த ஓஆர்எஸ் கரைசல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பொது சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமையிட மருத்துவமனைகள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் ஓஆர்எஸ் கரைசல் கார்னரில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதை பருகுவதற்கான வழிகாட்டுதல்கள் கொண்ட நோட்டீஸ்களும் அங்கு ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post அரசு மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் கரைசல் கார்னர்கள் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தவிர்க்க appeared first on Dinakaran.