×

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது: இன்னும் 8 நாட்களே உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம்தேதி (வெள்ளி) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும், சுயேச்சைகள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென்சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். காஞ்சிபுரத்தில் 11 பேர், திருவள்ளூரில் 14 பேர். ஸ்ரீபெரும்புதூரில் 31 பேர் போட்டியிடுகிறார்கள். அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் போட்டியிடுகிறார்கள். 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நோட்டாவும் இடம் பெறும். 15 வேட்பாளர்களுக்கு மேல் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒவ்வொரு 16 வேட்பாளர்களுக்கும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும்.

அதன்படி சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் 2 மற்றும் 3 வாக்குப்பதிவு இயந்திரம் கூடுதலாக வைக்கப்படும். மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு இயந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென்சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 68,321 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 3,726 வாக்குச்சாவடி மையங்கள் 944 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4,469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4,852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கும் தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தக்கூடிய வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று (புதன்) வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணிகள் அனைத்தும் இன்று அல்லது நாளைக்குள் முடிவடையும். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். இதைத்தொடர்ந்து 18ம் தேதி மாலை அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும்.

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களான 8,050 மையங்களில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்படும். முன்னதாக, இந்த வாக்குச்சாவடிகளுக்கு ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு போலீசார் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்வு பணி நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. 15 வேட்பாளர்களுக்கு மேல் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒவ்வொரு 16 வேட்பாளர்களுக்கும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும்.

The post தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது: இன்னும் 8 நாட்களே உள்ளதால் அனல் பறக்கும் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...