சென்னை: வாக்காளர்களுக்கு கொடுக்க பல கோடி பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி, சென்னை கே.கே.நகர், அசோக் நகரில் தொழிலதிபரும் அரசு ஒப்பந்ததாரருமான தியாகராஜன் வீடு மற்றும் ஆபீசில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சென்னை கே.கே.நகர் 11வது ஷெக்டர் 66வது தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(55). தொழிலதிபரான இவர், இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகிறார். அரசு ஒப்பந்ததாரரான தியாகராஜன் எடப்பாடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் இவரது வீடு மற்றும் அசோக் நகர் 15வது அவென்யூவில் உள்ள அலுவலகத்தில் பதுக்கி வைத்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 3 கார்களில் வந்து தொழிலதிபர் தியாகராஜன் வீடு, மற்றும் அவரது அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். 4 மணி நேரம் நீடித்த சோதனை இரவு 10 மணிக்கு முடிந்தது. இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், கடந்த ஒரு வாரத்தில் பல கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
The post வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பதுக்கியதாக தகவல் சென்னை தொழிலதிபர் தியாகராஜன் வீடு, அலுவலகத்தில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.