×

ஊழல் யுனிவர்சிட்டிக்கு வேந்தராக நியமிக்க பொருத்தமானவர் மோடி: தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் குரலாக திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தெற்கின் குரல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது. நாம் சொல்லியிருக்கும் அனைத்தையும் செய்யும் காலம் கனிந்து வருகிறது. சென்னையில் எந்த இடத்தில் மோடி ஷோ காட்டினார்? தியாகராயர் நகர். பிரதமர் அவர்களே.

அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா? உங்கள் ஷோ – ஃபிளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார், சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம். மோடி அவர்களே அந்தத் திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை.

அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020ல் ஒன்றிய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப்பொய் பேசுகிறார்.

வேலூரில் மோடி இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது. பலருக்கு என்ன சந்தேகம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான். இதில், தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார். ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்றால், அதற்குப் பொருத்தமான நபர், இந்தியாவில் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. ஏன் என்றால், ஊழலைச் சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடிதான். தமிழ்நாடு வேண்டாம் என்று புறக்கணித்த மோடிக்கு – ஒரே முழக்கத்தில் நாம் சொல்ல வேண்டியது, “வேண்டாம் மோடி!” என சொல்லுங்கள்.

அ.தி.மு.க.வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. அதுதான் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் – தினகரனும் – அதை போட்டிப் போட்டு செய்துக் கொண்டு இருக்கிறீர்களே. அதற்குப் பிறகு என்ன? அதில் சந்தேகம் வேண்டாம். எதிரி நாட்டு பயங்கரவாதிகள் போன்று, மோடி அரசு சொந்த நாட்டு உழவர்களை பழிவாங்கியபோது, இந்த பச்சைப்பொய் பழனிசாமி எங்கு சென்றார்? குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து, சிறுபான்மை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் துரோகம் செய்தார் பழனிசாமி. மோடி வாஷிங் மெஷினால் வெளுக்கப்பட்டு, பா.ஜ. கூட்டணி சார்பில் நிற்கிறவர்தான் தினகரன்.

1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘பெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள்.

ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை – இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த – அவரை மிரட்டி ராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.வின் தொங்கு சதைகளான பழனிசாமி பன்னீர்செல்வம் – தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ..வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அதிமுகவை ஆட்டுவிக்கிறது பா.ஜ.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும் தமிழினத்திற்கும் – தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ. கூட்டத்திற்கும் – துரோகம் இழைக்கும் பழனிசாமி பன்னீர்செல்வம் தினகரன் – பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார். பா.ஜ.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள்.

The post ஊழல் யுனிவர்சிட்டிக்கு வேந்தராக நியமிக்க பொருத்தமானவர் மோடி: தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stalin ,Theni ,CHENNAI ,India ,Lakshmipuram ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...