×

பட்டு நகரம் என அழைக்கப்படும்: ஆரணி மக்களவை தொகுதியை கைப்பற்றப்போவது யார்?

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் 12வது தொகுதியாக ஆரணி உள்ளது. நீண்ட காலமாக வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்து, தொகுதி மறுசீரமைப்பின் போது வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆரணி என உருவாக்கப்பட்டது. ஆரணி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. ஆரணி, செய்யாறு பகுதிகளில் விவசாயம் மற்றும் நெசவு பிரதானமான தொழிலாக இருக்கிறது. பட்டு சேலை, பொன்னி அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்றது. குறிப்பாக ஆரணி, களம்பூர் பகுதியில் மட்டும் சுமார் 200 நெல் அரவை ஆலைகள் உள்ளன.

இதில் உற்பத்தியாகும் அரிசி வகைகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பட்டு நகரம் என ஆரணி அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டு, காஞ்சிபுரம் பட்டுக்கு தனி அந்தஸ்து உள்ளதை போலவே ’ஆரணி பட்டு’ மிகவும் பிரபலமானது. கைலாசநாதர் கோயில், செஞ்சி கோட்டை, அரண்மனை எனப் பல்வேறு தனிச்சிறப்புகளும் இந்த தொகுதிக்கு உள்ளது. 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆரணி மக்களவைத் தொகுதி இதுவரை 3 தேர்தல்களை சந்தித்துள்ளது.

ஆரணி, வந்தவாசி, செய்யாறு, போளூர், செஞ்சி மற்றும் மைலம் என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியில் 2 முறை காங்கிரஸ், ஒரு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வந்தவாசி தொகுதியில் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்தனர். அதன்பின்னர் அதிமுக, திமுக ஆகியவை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது வழக்கமாக இருந்துள்ளது. அதிமுக, திமுகவை தவிர இந்தத் தொகுதியில் பாமகவுக்கும் வாக்குகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார்.

அவர் அதிமுக வேட்பாளரான வி.ஏழுமலையை விட 54% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பாக 6 வேட்பாளர்கள், சுயேச்சையாக 9 வேட்பாளர்கள் என 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கிருஷ்ணசாமி, பலராமன், பாமகவின் துரை, மதிமுகவின் செஞ்சி ராமசந்திரன் போன்றோர் இத்தொகுதியின் மக்களவை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தற்போதுள்ள எம்பி விஷ்ணு பிரசாத் மக்களவையில் 254 கேள்விகளை எழுப்பியுள்ளார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றியுள்ளார்.

காங்கிரசின் நம்பிக்கை கோட்டையாக இருந்த ஆரணி தொகுதி மீண்டும் ஒதுக்கப்படும் என இருந்த நிலையில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக வேட்பாளராக தரணி வேந்தன், அதிமுக வேட்பாளராக ஜி.வி.கஜேந்திரன், பாஜ கூட்டணியின் பாமக வேட்பாளராக கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக பாக்கியலட்சுமி போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் திமுக – அதிமுக நேரடியாக மோதுகின்றனர். இதில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன.

ஆரணி தொகுதி
வாக்காளர்கள்
ஆண்கள் 7,31,824
பெண்கள் 7,58,507
3ம் பாலினம் 109
மொத்தம் 14,90,440

2019ம் ஆண்டு தேர்தல் களம்
கட்சி வேட்பாளர்கள் வாக்குகள்
காங்கிரஸ் எம்.கே.விஷ்ணுபிரசாத் 6,17,760
அதிமுக ஏழுமலை 3,86,954
அமமுக செந்தமிழன் 46,383
நாதக தமிழரசி 32409
மநீம ஷாஜி 14776

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்
தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள்
போளூர் அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(அதிமுக)
ஆரணி சேவூர்.ராமச்சந்திரன்(அதிமுக)
செய்யார் ஓ.ஜோதி(திமுக)
வந்தவாசி(தனி) எஸ்.அம்பேத்குமார்(திமுக)
செஞ்சி செஞ்சி.மஸ்தான் (திமுக)
மயிலம் சிவக்குமார்(பாமக)

முந்தைய தேர்தலில்
வெற்றி பெற்றவர்கள்
வந்தவாசி தொகுதி
ஆண்டு வெற்றிபெற்றவர்
1962 செயராமன்(காங்.)
1967 விசுவநாதன்(திமுக)
1971 விசுவநாதன்(திமுக)
1977 வேணுகோபால்(அதிமுக)
1980 பட்டுசுவாமி(காங்.)
1984 பலராமன்(காங்.)
1989 பலராமன்(காங்.)
1991 கிருஷ்ணசாமி(காங்.)
1996 பலராமன்(தமாகா)
1998 எம்.துரை(பாமக)
1999 எம்.துரை(பாமக)
2004 செஞ்சி ராமச்சந்திரன்
(மதிமுக)
ஆரணி தொகுதி
ஆண்டு வெற்றிபெற்றவர்
2009 கிருஷ்ணசாமி(காங்.)
2014 ஏழுமலை(அதிமுக)
2019 எம்.கே.விஷ்ணு
பிரசாத்(காங்.)

The post பட்டு நகரம் என அழைக்கப்படும்: ஆரணி மக்களவை தொகுதியை கைப்பற்றப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Silk ,Arani ,Lok Sabha ,Tamil Nadu ,Vandavasi Lok Sabha Constituency ,Tiruvannamalai ,Sabha ,
× RELATED திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வாக்கு...