×
Saravana Stores

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை மலப்புரம் வண்டூரில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதி கோரி, கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய விண்ணப்பித்ததைச் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி நிராகரித்துள்ளதாகக் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.
அதில், அரசுத் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த யாத்திரைக்கு நாங்கள் எதிராக இல்லை எனவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், கடந்த முறை ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை 11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி கோரப்பட்டதாகவும் அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி; 11 மாவட்டங்களில் யாத்திரை செல்ல அனுமதி மறுத்தது நியாயமானது என தெரிவித்து, ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை நடத்திக்கொள்ளலாம் என கூறினார்.
அப்போது, மனுதாரர் தரப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நிலையில், நீதிபதி கன்னியாகுமரியில் யாத்திரை செல்ல அனுமதி கோரி விண்ணப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தை பரீசிலித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களிலும் ராம நவமி யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rama Navami ,Tamil Nadu ,iCourt ,Chennai ,Chennai High Court ,Ramanavami ,Malappuram Vandoor ,Kalyakawela ,Kanyakumari District ,
× RELATED தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு