×

தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது: மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி உரை

கோவை: தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது என்று கோவை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார்.

நேற்று சென்னை தி-நகரில் உள்ள பாண்டிபஜாரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2ம் நாளான இன்று வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு ஆதரவு திரட்டினார்.

இதை தொடர்ந்து, கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் வந்தார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கோவையில் இருந்து பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் வருகை தந்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார். மோடி, மோடி என கோஷம் எழுப்பி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார்.

* இதன்பின்னர் பிரதமர் பேசியதாவது:

என் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. “கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம் என்று கூறியுள்ளார். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தமிழில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொங்கு மண்டலமும், நீலகிரியும் பாஜகவிற்கு எப்போதும் முக்கியமான இடங்களாகும். “தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. தமிழகம் முழுவதும் சொல்கிறது, மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி. எங்களுடைய அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது.

எங்கள் அரசு இந்தியர்கள் மீது நம்பிக்கை வைத்து கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்தது. எதை முடியாது என்று சொன்னார்களோ அதை நாங்கள் செய்து காட்டினோம். பாஜக அரசு இந்த பகுதியில் பாதுகாப்பு முனையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கோவை தவிர தமிழகத்தில் 2 இடங்களில் மல்டிமோடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இருக்கிறோம்.

கோவைக்கு 2 வந்தே பாரத் ரயில்கள் வருகின்றன. 3வது முறை ஆட்சியின் போது கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம். இன்று நாடு 5ஜி-யில் சாதனை படைக்கிறது. பாஜக வேட்பாளர்களின் வெற்றி தமிழக வெற்றிப் பாதைக்கான அச்சாரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது: மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,PM Modi ,Metuppalayam ,KOWAI ,Modi ,Goa Methuppalayam ,Narendra Modi ,Lok Sabha elections ,
× RELATED இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏதும்...