×

சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்

*இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சாத்தான்குளம் தெற்கு ரத வீதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மைய கட்டிடம் அபாய நிலையில் இருந்ததால், அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இதன் காரணமாக பாழடைந்த அங்கன்வாடி மையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கான பூங்காவும் பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. அபாயகரமாக காட்சியளிக்கும் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை உரிய நிதி ஒதுக்கப்படாததால் பாழடைந்த பழைய கட்டிடம் காட்சிப் பொருளாக உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடமாக காணப்படுவதால் விஷஜந்துகள் புகலிடமாக மாறக்கூடுமென இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனருகே தற்போது பேரூராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளதால், தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும் வாடகை கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான போதிய வசதிகள் இல்லை எனவும் பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாழடைந்த அங்கன்வாடி மையத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டவும், இங்குள்ள குழந்தைகள் பூங்காவை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Anganwadi Center ,Satankulam ,Anganwadi ,South Ratha Road ,Old Anganwadi center ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை