×
Saravana Stores

திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

*கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜை

*பச்சடி செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சி

திருப்பதி : திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். பச்சடி செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். தெலுங்கு வருடத்தில் முதல் நாளான நேற்று யுகாதி பண்டிகை அனைவரும் வீடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யுகாதி பண்டிகை ஆந்திர மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் கோயில் முழுவதும் வண்ண மலர்களாலும், பழம் மற்றும் காய்றிகளாலும் அலங்கரிக்கப்பட்டது. கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஏழுமலையான தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் அதிகாலையில் புத்தாடை அணிந்து கோயில்களில் சென்று வழிபட்டனர். திருப்பதி கங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதம் வழங்கப்பட்டது.

சித்தூர்: சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெலுங்கு மக்கள் அனைவரும் காலை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து இஷ்ட தெய்வங்களை வழிபட்டு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி யுகாதி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

யுகாதி பண்டிகை கசப்பாகவும், இனிப்பாகவும், துவராகவும், புளிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், வெல்லம், புளியம்பழம், மிளகு, வேப்பிலை உள்ளிட்ட 7 வகையான பொருட்களை ஒன்று சேர்த்து பச்சடி செய்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி உண்டு மகிழ்ந்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தெலுங்கு மக்கள் யுகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்.

இக்கோயில் யுகாதி தெலுங்கு வருட பிறப்பு முன்னிட்டு காலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்தன அபிஷேகம், குங்கும அபிஷேகம் விபூதி, அபிஷேகம், பஞ்ச தீர்த்த அபிஷேகம், இளநீர் அபிஷேகம் பஞ்சாங்கமிரத அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் செயல் அலுவலர் மூலவருக்கு பட்டுவஸ்திரங்கள் மேல தாளங்களுடன் ஊர்வலம் ஆக எடுத்து வந்து மூலவருக்கு சமர்ப்பணம் செய்து பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை 4 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய கியூ லைனில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதித்தனர். ஏராளமான பக்தர்கள் தெலுங்கு வருடப்பிறப்பு இந்நாளில் அனைவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும், குடும்பத்தார் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வணங்கி மூலவரை தரிசனம் செய்தனர்.

இதே போல் சித்தூர் மாநகரத்தில் அங்காளம்மன் கோயில், வெங்கடேச பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், சீரடி சாய்பாபா கோயில், துர்க்கை அம்மன் கோயில், ராஜு கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதானை நடைபெற்றது.

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் யுகாதி பண்டிைகயொட்டி கோயிலை பல வண்ண மலர்களாலும், கண்கள் மிளுரும் வகையில் மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு, தேவஸ்தான செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் மற்றும் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோயில் வேதப் பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளை செய்ததோடு சுவாமி அம்மையார்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடியை பிரசாதமாக வழங்கப்பட்டது. தெலுங்கு வருடப்பிறப்பை ஊட்டி கோயில் அருகில் உள்ள சிவன் கோயில் அருகில் உள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு ஊர்வலமாக கோயிலில் இருந்து தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோயில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.

The post திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Yugadi Festival Kolagala Celebration ,Tirupati, Chittoor, Srikalahasti ,Tirupati ,Yugadi festival ,
× RELATED திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம்...