×

இடுக்கி பகுதியில் அனல் வெயிலால் கருகும் ஏலச் செடிகள்

*விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கவலை

கூடலூர் : தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வருவதால், ஏலச் செடிகள் காய்ந்து வருகின்றன. ஏலச் செடிகள் பூ பூக்கும் தருணத்தில் மழை இல்லாமல் செடிகள் கருக தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தோட்ட தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையை ஒட்டி, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. மலைப்பாங்கான இயற்கை எழில் நிறைந்த இந்த மாவட்டத்தில் லட்சக்கனக்கான ஏக்கர் பரப்பளவில் ஏல விவசாயம் நடக்கிறது.

இங்குள்ள ஏலத் தோட்டங்களில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் வசதி கிடையாது. மழையை நம்பித் தான் ஏல விவசாயம் நடக்கிறது. இந்தாண்டு எதிர்பார்த்த அளவு கோடை மழை பெய்யாததால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால், தண்ணீர் இல்லாத ஏலத் தோட்டங்களில் ஏலச்செடிகள் கருகி வருகின்றன. ஏலக்காய் அதிகம் சாகுபடி செய்யப்படும் வண்டன்மேடு, மாலி பகுதிகளில் கோடை மழை பெய்யாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், ஆனவிலாசம், அங்காரா, கொச்சரா, கருணாபுரம், கம்பம்மெட்டு, புளியன்மலை, காஞ்சியாறு, மேப்பாறை, மேரிகுளம், வள்ளக்கடவு ஆகிய பகுதிகளிலும் ஏலச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து ஏல விவசாயிகள் கூறுகையில், ‘மழை, பனிப்பொழிவு காலநிலை ஏலச் செடிகளுக்கு சாதகமானவை. ஏலச்செடிகள் சரம் வைத்து பூத்து குலுங்கும் காலம் இது. மழை இல்லாததால் சரம் வாடி காய் உதிரும். ஏலக்காய் மகசூலும் பாதிக்கும். இந்த ஆண்டு ஒரு கிலோ ஏலக்காய் சராசரி ரூ.1,700 வரை விற்றதால் ஏல விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தோம். இந்த சமயத்தில் ஏலச் செடிகள் கருகி வருவது கவலையாக உள்ளது’ என்றனர்.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு: ஏலச் சாகுபடியில் தற்போது பூ பூக்கும் காலம். இந்த சமயங்களில் மழை பெய்தால், செடிகளுக்கு எரு வைத்தல், செடிகளைச் சுற்றி களை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, தேவாரம் பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இடுக்கில் மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்று வருவர். தற்போது மழை இல்லாததால் ஏலத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. இதனால், தமிழக தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

The post இடுக்கி பகுதியில் அனல் வெயிலால் கருகும் ஏலச் செடிகள் appeared first on Dinakaran.

Tags : Idukki region ,Gudalur ,Idukki district ,Tamil Nadu-Kerala border ,Idukki ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு