திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவினை வலியுறுத்தி மத்திய பல்கலைகழகத்தின் சமுதாய கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நாகை தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் வருன்சோனி துவக்கி வைத்தார்.நாட்டின் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியானது 7 கட்டங்களாக நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் இருந்து வரும் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஓரே கட்டமாக வரும் 19ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் தேர்தலை நடத்துவதற்காக தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் மூலம் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, பணி ஓதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆணையத்தின் உத்தரவு படி 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர்ளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதனை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தின் சமுதாய கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நாகை எம்.பி தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர் வருன்சோனி துவக்கிவைத்தார். இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாருஸ்ரீ, எஸ்.பி ஜெயக்குமார், ஆர்.டி.ஓ சங்கீதா, தாசில்தார் செந்தில்குமார், பி.ஆர்.ஓ செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி மத்திய பல்கலைகழக சமுதாய கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.