×

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

*கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது. அதனை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிைலயில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்களை கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்து, சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணி, நேற்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்ெபன்னாத்தூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 இடங்களில் நடந்தது.

அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, ேபாளூர், மயிலம், செஞ்சி ஆகிய 6 இடங்களில் நடந்தது. சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்பட்டன.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். மேலும், ஒப்புகை ரசீது இயந்திரங்களில் சின்னங்கள் அச்சிடப்பட்ட ரசீதுகளை பொருத்தும் பணியையும் பார்வையிட்டார். மேலும், இந்த பணியில் ஈடுபட்டுள்ள ‘பெல்’ நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி, தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்) பயன்படுத்தப்படுகிறது. அதையொட்டி, முதல் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னங்களும், இரண்டாவது இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் சின்னங்களும், இறுதியாக நோட்டா சின்னமும் இடம் பெற்றன.
ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர்.

எனவே, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதையொட்டி, ஆரணி மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவுக்கான முதல் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னங்களும், இரண்டாவது வாக்குப்பதிவு இயந்திரத்தில் 13 வேட்பாளர்களின் சின்னங்களும், இறுதியாக நோட்டா சின்னமும் இடம் பெற்றன.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தியதும், அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.போளூர்: ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட போளூர் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி போளூர் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மற்றும் டிஆர்ஓ பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, போளூர் தாசில்தார் வெங்கடேசன், சேத்துப்பட்டு தாசில்தார் சசிகலா மற்றும் மண்டல துணை தாசில்தார்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல், ஆரணி தாலுகா அலுவலகத்தில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது, நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Arani ,Thiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,Lok Sabha elections ,Tamil Nadu ,
× RELATED திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வாக்கு...