×

கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி

*11 பேர் படுகாயம்

கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் பரிதாபமாக பலியானார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் உப்பு குண்டூரில் இருந்து கேரள மாநிலம் வைக்கத்திற்கு கொண்டைக்கடலை லோடு ஏற்றிய லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்தது. தூத்துக்குடி மாவட்டம் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த குமார் மகன் ராமசாமி (61) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அச்சம்பட்டி அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி திடீரென பழுதானது. இதனால் டிரைவர் ராமசாமி சாலையின் இடது ஓரமாக லாரியை நிறுத்தியிருந்தார்.

இதுபோல் நேற்று முன்தினம் இரவில் திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி அரசு பஸ் புறப்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த விசாக கணேசன் டிரைவராகவும், செங்கோட்டை மேலூரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன் (53) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். கடையநல்லூர் பகுதியில் பஸ் வந்தபோது டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 16 பேர் இருந்தனர்.

அதிகாலை 4.30 மணி அளவில் அச்சம்பட்டி அருகே கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் பஸ் அதிவேகமாக மோதியது. இதில் பஸ்சின் இடதுபுறம் இருந்த கண்டக்டர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் டிரைவர் விசாக கணேசன், பயணிகள் பொட்டல்புதூர் ஆத்தங்கரை தெருவைச் சேர்ந்த நாகூர்மீரான் மகள் பிர்தவ்ஸ் பானு(22), செங்கோட்டை பிரானூர் பார்டர் சண்முகராஜ் மகன் இசக்கி விஸ்வா(22), கண்ணனூர் காந்திநகர் பிரபு மனைவி மகா (29), திருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் வீதி விவேக் மனைவி செல்வராணி (40), திருப்பூர் சக்திநகர் ஆனந்தராஜ் மனைவி உதயா (34), மேலகரம் தெற்கு தெரு பழனியாண்டி மகன் மாரிமுத்து (35), அச்சன்புதூர் சாந்தி (47), செங்கோட்டை விஸ்வநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு மாரிமுத்து (43), ராமையா மகன் இசக்கி (32), திருப்பூர் ராமமூர்த்தி மனைவி பங்காரியம்மாள் (72) ஆகிய 11 பேர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்த தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா, தாசில்தார் சுடலைமணி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கடையநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் படுகாயமடைந்த பிரானூர் பார்டரைச் சேர்ந்த இசக்கி விஸ்வா ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் கடையநல்லூர், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கண்டக்டர் பாலசுப்பிரமணியனுக்கு மனைவி மாரியம்மாள், ஒரு மகன், மகள் உள்ளனர்.

The post கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Achampatti ,Andhra ,Uplu Gundur ,Kerala ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது