பொன்னமராவதி, ஏப்.10: பொன்னமராவதி பகுதியில் போதிய மழை இல்லாததால் மீன் பிடித்திருவிழாக்கள் கடந்த ஆண்டை விட மிககுறைவாகவே நடக்கிறது. தமிகத்திலேயே அதிக மீன்பிடித்திருவிழாக்கள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கின்றது. பொன்னமராவதி பகுதியில் ஒருசில இடங்களில் கண்மாய் குளங்கள் நிரம்பியிருந்தது. இந்த கண்மாய்களில் தற்போது தண்ணீர் குறைந்துள்ளது. கண்மாய்களில் மீன் குத்தகை விடாமல் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி யாரும் மீன்களை பிடித்துவிடாமல் பாதுகாப்பர்.
பாதுகாக்கப்பட்ட மீன்களை பிடிப்பதற்கு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மீன்பிடித்திருவிழா நடத்த நாள் குறித்து அக்கம் பக்கம் ஊரினருக்கு தகவல் தெரிவிப்பர். இதனையடுத்து அதிகாலை நேரத்தில் மீன்பிடித்திருவிழா நடத்தப்படும். இதன் அடிப்பட்டியில் நேற்று மூலங்குடி தேனிக் கண்மாய் பிடித்திருவிழா நடந்தது. கண்மாய் கரையின் சுவாமி வழிபாடு செய்து ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய்க்கரையில் நின்று வலை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
வலை, தூரி, ஊத்தா போன்ற உபகரணங்கள் மூலம் பொதுமக்கள் மீன்பிடித்தனர். இதில் விரால், கெண்டை, அயிரை, சிலேப்பி போன்ற வகை மீன்கள் கிடைத்தன. இந்த மீன்பிடியில் மூலங்குடி, கொன்னைப்பட்டி, மலம்பட்டி, கொப்பனாபட்டி, செம்பூதி, மணப்பட்டி, தூத்தூர், ஆலவயல், கண்டியாநத்தம், வலையபட்டி, மைலாப்பூர, உலகம்பட்டி, கட்டையாண்டிபட்டி, பூலாங்குறிச்சி, செவலூர்,
உள்ளிட்ட புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். இதுபோன்று மீன்பிடித்திருவிழா நடத்தினால் மழைபெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி பொதுமக்களின் நம்பிக்கையாகும். இந்த கண்மாய்களில் பிடித்த மீனை விற்பனை செய்யால் வீடுகளில் குழம்பு வைத்து உண்பர். மீன்படித்திருவிழா நடைபெறும் கிராமங்களில் மீன் மணம் வீசும்.
The post பொன்னமராவதி பகுதியில் களையிழந்த மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.