×

அதிமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் ரூ.32 கோடி பறிமுதல்: விடிய, விடிய நடந்த ஐடி ரெய்டில் சிக்கியது; வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கலா?

பொள்ளாச்சி: அதிமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது அதிமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியை சேர்ந்தவர் அருள்முருகன். இவரது சகோதரர் சரவண முருகன். இருவரும் அதிமுக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி, ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்பிஎஸ் என்ற பெயரில் கோழிப்பண்ணை வைத்தும் கோழி தீவன விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கோழிப்பண்ணைகளின் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ளது. கோழிப்பண்ணைகளுக்கான அனைத்து கணக்கு வழக்குகள் இந்த அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே வருமான வரித்துறையின் பொள்ளாச்சி கிளை அலுவலகமும் உள்ளது. இந்நிலையில் வெங்கடேசா காலனியில் இந்த கோழிப்பண்ணை தலைமை அலுவலகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பல கோடி ரூபாய் பதுக்கி வைத்ததாக வருமானவரித்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து திடீரென வருமான வரித்துறையினர் தனி வாகனத்தில் கோழிப்பண்ணை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். உரிமையாளர்கள் அருள்முருகன், சரவணமுருகன் ஆகியோரை வரவழைத்தனர். இரவில் பணியிலிருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்களை உள்ளேயே வைத்து விசாரித்தனர். விடிய விடிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.32 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று காலையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

தேர்தல் நேரத்தில் அதிமுக ஆதரவாளர்கள் கோழிப்பண்ணையில் கணக்கில் வராத பணம் ரூ.32 கோடி பிடிபட்டதால் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுகவினர் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த 7ம் தேதி நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்ற நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பா 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சியில் அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் ரூ.32 கோடி பறிமுதல்: விடிய, விடிய நடந்த ஐடி ரெய்டில் சிக்கியது; வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கலா? appeared first on Dinakaran.

Tags : Pollachi Poultry ,AIADMK ,Vidya ,Pollachi ,Income Tax Department ,Poultry ,Dinakaran ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்