×

‘வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது’ சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: காட்டாங்கொளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சாரணடைய வேண்டும். வேறொரு நீதிமன்றத்தில் சரணடைய முடியாது. எனவே, சத்தியமங்கலம் நீதிமன்றம் 5 பேரின் சரண்டரை ஏற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

The post ‘வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது’ சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Supreme Court ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Aramudhan ,DMK North Union ,Kattangolathur ,Kanchipuram ,Tirupur ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஜாமீன் கோரி ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!