×

ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜவை எதிர்க்க வேண்டும்: காங்.கில் இணைந்த பிரேந்தர் சிங் பேச்சு

புதுடெல்லி: ‘பாஜ அரசின் தவறான கொள்கைகளால், மக்களின் மனநிலை மாறிவிட்டது. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பாஜவை எதிர்த்து குரல் கொடுத்தே தீர வேண்டும்’ என காங்கிரசில் இணைந்த ஒன்றிய முன்னாள் அமைச்சர் பிரேந்தர் சிங் கூறி உள்ளார். அரியானா மாநிலத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான பிரேந்தர் சிங் (78), கடந்த 2014ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ ஆட்சியில் 2014 முதல் 2019 வரை ஒன்றிய எஃகு துறை மற்றும் ஊரக மேம்பாடு, குடிநீர், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரும் இவரது மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான பிரேம் லதாவும் நேற்று முன்தினம் பாஜவிலிருந்து விலகினர். இதைத் தொடர்ந்து டெல்லி வந்த பிரேந்தர் சிங் மற்றும் பிரேம் லதா இருவரும் நேற்று காங்கிரசில் இணைந்தனர். அப்போது பிரேந்தர் சிங் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசில் 40 ஆண்டு சேவை செய்துள்ளேன். இப்போது நான் தாய்வீட்டிற்கு மட்டும் வரவில்லை.

இது எனது சித்தாந்தத்தின் மறுபிரவேசமும் கூட. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பாஜ அரசுக்கு எதிராக நாம் குரல் கொடுத்தே தீர வேண்டிய நிலை இருக்கிறது. நாட்டின் மக்களின் மனநிலை மாறுகிறது. அதற்கு பாஜ அரசின் தவறான கொள்கைகளே காரணம். பாஜ ஆட்சியில் விவசாயிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. பாஜவிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் ஏழைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களுக்கு யாருடைய கஷ்டமும் புரியவில்லை’’ என்றார். அப்போது, அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் இருந்தனர்.

The post ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜவை எதிர்க்க வேண்டும்: காங்.கில் இணைந்த பிரேந்தர் சிங் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Birender Singh ,Congress ,New Delhi ,BJP government ,Ariana ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...