×

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்ட் தேர்தலை ஜூன் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டின் செயலாளர் எம்.ஜம்பு தாக்கல் செய்த மனுவில், நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடந்த 2015ல் நடத்தப்பட வேண்டிய தேர்தல் 2018 ஜூன் 10ம் தேதி நடந்தது. அந்த தேர்தலில் ஜாக்குவார் தங்கம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். அதிலிருந்து இதுவரை ஜாகுவார் தங்கமே தலைவராக நீடித்து வருகிறார். இந்நிலையில், 2018 ஜூலை மாதம் கில்டின் சிறப்பு செயற்குழுவை கூட்டி செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கம் செய்து ஜாகுவார் தங்கம் அறிவித்தார். கில்டின் செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர் மட்டுமே கலந்துகொண்டதால் அது சிறப்பு செயற்குழு கூட்டமாகாது. கில்டின் செயல்பாடுகளை முடக்கிவைத்துள்ளனர்.

எனவே, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை கில்டை நிர்வகிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் அய்யப்பராஜ், ஜோசப் சகாயராஜ் ஆகியோரும், தலைவர் சார்பில் வழக்கறிஞர் மகேஷ்வரியும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2017-2019க்கான தேர்தல் காலாவதியாகிவிட்டது. எனவே, 2024-2026 காலத்திற்கான தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்கவும், அவர்கள் தேர்தலை நடத்துவதற்காகவும், கில்டின் அன்றாட பணிகளை மேற்கொள்வதற்காகவும் வங்கி கணக்கை நிர்வகிக்கவும் இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி தேர்தல் அதிகாரிகளாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், வி.பாரதிதாசன் ஆகியோர் நிமிக்கப்படுகிறார்கள். இரு தரப்பும் இது தொடர்பான உத்தரவாதத்தை தேர்தல் அதிகாரிகளிடம் தர வேண்டும். அந்த கடிதத்தை சம்மந்தப்பட்ட வங்கி ஏற்றுக்கொண்டு கில்டின் வங்கி கணக்கை திறந்துவிட வேண்டும். தேர்தல் அதிகாரிகள் 2024 மார்ச் 30ம் தேதி வரை தகுதிபெற்ற வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து, ஆய்வு செய்து பட்டியலை அறிவிப்பு பலகையில் 3 வாரங்களுக்குள் ஒட்ட வேண்டும். தேர்தல் அதிகாரிகள் தேர்தலை வரும் ஜூன் 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கு இரு தரப்பும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்ட் தேர்தலை ஜூன் 15ம் தேதிக்குள் நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : South Indian Film and TV Producers Guild ,Madras High Court ,CHENNAI ,M. Jambu ,South Indian Film and Television Producers Guild ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...