×

தமிழ்நாடு, தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்?: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

மதுரை: தமிழர்கள் மேல் மட்டும் பிரதமர் மோடிக்கு ஏன் இத்தனை வன்மம், தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா, நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா, ஏன் இந்த ஓரவஞ்சனை, எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மதுரை வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:
கடந்த பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டு மக்களை மதித்து தமிழ்நாட்டிற்கு என்று எந்த சிறப்புத் திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி, இப்போது வாக்கு கேட்டுத் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிற்குச் சிறப்புத் திட்டங்கள் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. இங்கு பக்கத்து மாவட்டங்கள் வெள்ளத்தில் தவித்தார்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. எந்த முகத்துடன், மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும், இடி, ஐடி, சிபிஐ, ஆளுநர்களை வைத்துத் தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா.

தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க அன்னை சோனியா – பிரதமர் மன்மோகன் சிங் – முத்தமிழறிஞர் கலைஞர் – ஆகியோர் இந்த மதுரையில் தொடங்கிய சேது சமுத்திர திட்டத்தை முடக்கினார்களே, ஏன். பத்தாண்டு காலத்தில் அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டித் தராமல் தமிழ்நாட்டிற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தார்களே. நாங்கள் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா மட்டும் திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.

தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது? நம்மைப் பொறுத்தவரை, திராவிட மாடல் அரசு இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்த பெருமிதத்துடன் உரிமையுடன் உங்களிடம் வாக்கு கேட்கிறேன்.

இந்த மாமதுரைக்கும், சிவகங்கைக்கும் அறிவின் அடையாளமாக – வீரத்தின் அடையாளமாக – பண்பாட்டின் அடையாளமாக – நம்முடைய அரசு கொடுத்திருக்கும் முத்தான மூன்று திட்டங்கள் என்ன? தி.மு.க. என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல. தமிழ்ச் சமுதாயத்தை தட்டியெழுப்பும் அறிவியக்கம் என்பதற்கு அடையாளமாக, கழகத்திற்கு மட்டும் அறிவாலயம் கட்டாமல் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் பயனளிக்கும் “அறிவு ஆலயங்களை“ கட்டி வருகிறோம்.

மதுரையில் அறிவின் அடையாளமாக பிரமாண்மாண்டமாக எழும்பி இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம். தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய வாதங்களால் தடை ஏற்படுத்தியபோதும், அதை உடைத்து வெற்றி பெற்று, ஜல்லிக்கட்டு நடத்துகிறோம். உலகமே நம்முடைய வீர விளையாட்டைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். தமிழ் நாகரிகத் தொட்டிலாக இருக்கும் கீழடி ஆய்வு நடக்க கூடாது என்று எப்படியெல்லாம் தடை ஏற்படுத்தியது பா.ஜ.க! எத்தனை சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள்.

அந்தத் தடையை எல்லாம் உடைத்து எறிந்து, தமிழ் நாகரிகத்தின் அடையாளமாக அமைக்கப்பட்டிருக்கிறது, கீழடி அருங்காட்சியகம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். இப்படி எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம் என்றால், தி.மு.க. என்றாலே, சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். இப்படி நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, செய்ய இருப்பதைப் பற்றிப் பேசினால், பிரதமர் மோடி என்ன பேசுகிறார்?

மத உணர்வுகளைத் தூண்டி, இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்த முடியுமா, வாக்கரசியல் பண்ண முடியுமா, மூழ்கிக் கொண்டு இருக்கும் பா.ஜ.க.வையும் – தன்னுடைய இமேஜையும் கரைசேர்க்க முடியுமா என்று திசைதிருப்பும் அரசியலை பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்தால், “வணக்கம்! எனக்கு இட்லியும் – பொங்கலும் பிடிக்கும்; தமிழ் பிடிக்கும்; திருக்குறள் பிடிக்கும் ஓட்டு போடுங்கள்” என்று கேட்கும் பிரதமரை, நாங்கள் கேட்கிறோம்… தமிழ் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு 74 கோடி ரூபாயும் – சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபாய் ஏன் என்று கேட்கிறோம்! தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது.

தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை விட்டு விதண்டாவாதம் பேச வைக்கிறார். தமிழின் சிறப்புகளைச் சொன்ன, கால்டுவெல்லையும் ஜி.யு.போப்பையும் ஆளுநரை வைத்து இழிவுபடுத்துகிறார்கள் என்று கேட்கிறோம். இப்படி தமிழுக்கும் – தமிழ்நாட்டிற்கும் – தமிழினத்திற்கும் – விரோதமாக இருக்கும் பா.ஜ.க.வுக்குப் பாதம்தாங்கியாக இருந்து, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி. கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே… எங்கேயாவது, பா.ஜ.க.வையோ – மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை மறந்தாவது பேசுகிறாரா?

தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரின் முதுகிலும் குத்தியவர்தான், முதுகெலும்பு இல்லாத பழனிசாமி. இப்போது பிரிந்து சென்றவர்கள் பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணியாகவும் – பழனிசாமி கள்ளக் கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள். இப்போது இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் – ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி. பா.ஜ.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டுத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ. – தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய தமிழர் விரோதிகளை ஒருசேர வீழ்த்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாடு, தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்?: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamils ,Chief Minister ,M.K.Stal ,Modi ,Madurai ,PM Modi ,M.K.Stalin ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...