×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை அடுத்தடுத்து தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தலைவர்கள்: கோவை, நெல்லையில் வரும் 12ம்தேதி ராகுல்காந்தி பேசுகிறார்

* கரூர், மயிலாடுதுறை, சிவகங்கையில் 15ம்தேதி பிரியங்கா காந்தி பிரசாரம்
* 16ம் தேதி கடலூர், கிருஷ்ணகிரி வருகிறார் மல்லிகார்ஜூன கார்கே

சென்னை: கோவை, நெல்லையில் வரும் 12ம் தேதி ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ள நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வருகை தர உள்ளனர். அதன்படி, கரூர், மயிலாடுதுறை, சிவகங்கையில் பிரியங்கா காந்தி வரும் 15ம்தேதி ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய உள்ளார். 16ம்தேதி மல்லிகார்ஜூன கார்கோ வருகை தருகிறார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் உச்ச கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை குறி வைத்து தேசிய தலைவர்களும் முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது அந்தந்த கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரையாற்றி வருகிறார். மறுபுறம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என ஏராளமானோர் களம் இறங்கியுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை உறுதியாகியுள்ளது. ராகுல்காந்தி வரும் 12ம் தேதியும், அடுத்தடுத்து பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என தேசிய காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். ரோடு ஷோ, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளதால் காங்கிரசார் உற்சாகமடைந்துள்ளனர்.

அதாவது, தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 12ம் தேதி தமிழகம் வர உள்ளார். அன்றைய தினம் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மற்றும் தென் மாவட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அங்கு ரோடு ஷோவிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து அன்று மாலை கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பங்கேற்று பேசுகின்றனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் ஆகியோர் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியாகாந்தியின் தமிழகம் வருகை உறுதியாகியுள்ளது. அவர் 15ம்தேதி காலை திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் சென்று சிவகங்கை, மயிலாடுதுறை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்யும் வகையில் அவரது பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரும் 16ம்தேதி தமிழகம் வருகை தர உள்ளார். அவர் கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுறார். காங்கிரஸ் தலைவர்களின் அடுத்தடுத்த பிரசாரம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இவர்களின் சுற்றுப்பயண விவரத்தை தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு பெரும் ஆதரவை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில் தேசிய தலைவர்கள் வருகையால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை அடுத்தடுத்து தமிழ்நாடு வரும் காங்கிரஸ் தலைவர்கள்: கோவை, நெல்லையில் வரும் 12ம்தேதி ராகுல்காந்தி பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Tamil Nadu ,India ,Rahul Gandhi ,Coimbatore, Nella ,Priyanka Gandhi ,Karur ,Mayiladuthurai ,Sivagangai ,Mallikarjuna Kharge ,Cuddalore ,Krishnagiri ,Chennai ,Coimbatore, ,Nella ,India Alliance ,Nella, Coimbatore ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…