×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். மேலும், மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்கள், அபிஷேக பொருட்கள் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் சர்வ லோகேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு நள்ளிரவு 11 மணிக்கு வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு உற்சவர் அங்காளம்மனை பூசாரிகள் தங்கள் தோள்களில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து தாலாட்டு பாடல்கள் பாடியதும் எதிரே கூடியிருந்த பக்தர்கள் தங்கள் கையில் சூடம் ஏற்றி பக்தி பரவசத்தில் அங்காளம்மனை வணங்கினர்.

இதில் தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட எஸ்பி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் மற்றும் மேலாளர் மணி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Panguni month ,Amavasya ,Unchal Utsavam Kolagalam ,Melmalayanur Angalamman Temple ,Melmalayanur ,Angalamman ,Villupuram district ,Unchal Utsavam ,
× RELATED வைகாசி அமாவாசையை முன்னிட்டு...