- செங்கல்பட்டு ஊராட்சி
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
- செங்கல்பட்டு மாநில மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தின மலர்
செங்கல்பட்டு: 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை, தலைக்காய சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, கண் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு நாளொன்றுக்கு உள்நோயாளியாக 1,000 பேரும் புறநோயாளிகளாக 3,000 பேரும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்து ஏராளமானோர், இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கும் வார்டு பகுதியில் தேங்கும் குப்பைகளை அள்ளுவதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கும் தனியார் நிறுவனம் சார்பில் 370 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.9000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மாத ஊதியம் சரியான முறையில் வழங்குவதில்லை. இது சம்பந்தமாக பலமுறை தனியார் நிறுவன மேலாளரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து இன்று காலையில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிற நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒப்பந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘எங்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. அதை கேட்டால், ‘உங்களில் பலருக்கு வயதாகி விட்டது. சரிவர வேலை செய்வதில்லை’ என பல்வேறு காரணங்களை கூறி பலரை நிர்வாகம் நிறுத்தி விடுகிறது. இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எங்களுடைய அன்றாட தேவை பூர்த்தி ஆகவில்லை. எனவே நிர்வாகம் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் விரைந்து வந்து, சம்பள பாக்கியை உடனடியாக கொடுத்து விடுவதாக உறுதியளித்தார். அதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.