*தீயை கட்டுக்குள் கொண்டு வர மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை
சித்தூர் : சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர மாநகராட்சி ஆணையர் அருணா நடவடிக்கை மேற்கொண்டார். சித்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான லெனின் நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் அருணா அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அருணா கூறியதாவது: சித்தூர் மாநகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளான மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெயில் காலம் என்பதால் மக்காத குப்பையில் எதிர்பாராதவிதமாக வெயிலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கு முழுவதும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே குப்பை கிடங்கு அருகே உள்ள லெனின் நகர் மற்றும் இந்திரம்மா காலனி காலனியை சேர்ந்த பொது மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறை வீரர்கள் போர்க்கால அடிப்படையில் தீயை அணைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார்கள். ஓரிரு மணி நேரத்திற்குள் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.
The post சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.