×

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் யுகாதி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்

*கோயில்களில் சிறப்பு பூஜை

சித்தூர் : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் யுகாதி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. ஆந்திர மாநில மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தெலுங்கு வருடப்பிறப்பு எனப்படும் யுகாதி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களுக்கு சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பது போல் தெலுங்கு மக்களின் சித்தரை மாதம் முதல் நாள் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதே போல் தெலுங்கு மக்கள் வெளி மாநிலங்களில் இருந்தாலும் சரி, வெளி நாடுகளில் இருந்தாலும் சரி யுகாதி பண்டிகை அன்று அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து கொண்டாடுவார்கள்.அதுமட்டுமல்லாமல் தெலுங்கு மக்கள் மட்டும் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஓடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தெலுங்கு மக்கள் அனைவரும் யுகாதி பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள்.

திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்டங்களில் யுகாதி பண்டிகை கொண்டாடுவதற்காக பஜார்களில் மா இலை, மாங்காய் உள்ளிட்ட பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது. அதேபோல் ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள் இன்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களான காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆனபுஷ்பா அபிஷேகம், தயிர் அபிஷேகம், குங்குமபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், பஞ்ச தீர்த்த அபிஷேகம், பஞ்சாங்கமிறத அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த தெலுங்கு யுகாதி புத்தாண்டு அமாவாசை மறுநாள் பாட்டியம் நாளில் வருவதால் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் சாஸ்திர கணிப்புப்படி பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என சாஸ்திர வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள். அதேபோல் ஒரு சில ராசியினருக்கு மட்டுமே தீமைகள் நடைபெறும்.

மற்ற ராசியை சேர்ந்தவர்களுக்கு நன்மைகள் ஏற்படும் என சாஸ்திர வல்லுநர்கள் தங்களின் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ‘ஸ்ரீக்ரோதி’ நாம வருட யுகாதியை முன்னிட்டு கோயிலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கு புத்தாண்டு யுகாதியை யொட்டி கோயிலில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு யுகாதி பச்சடி விநியோகிக்கப்படுகின்றன.

தொடர்ந்து காலை 9.00 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மேலும் கோயில் அருகில் தேர் வீதியில் உள்ள பக்த கண்ணப்பருக்கு சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பூஜை பொருட்கள் வழங்க உள்ளது. மாலை 4.00 மணி முதல் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி அருகில் தேவஸ்தான ஆஸ்தான சித்தாந்தியால் பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு கவி சம்மேளனம் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு நான்கு மாட வீதிகளில் ஸ்ரீ சுவாமி அம்மையார்களின் விதி உலா நடைபெறவுள்ளது என்று கோயில் நிர்வாக அலுவலர் நாகேஸ்வர ராவ் தெரிவித்தார்.

யுகாதி என்றால் என்ன?

யுகாதி என்றால் யுகம் முதல் ஆதி வரை என்பது யுகாதி என அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் யுகாதியில் கலக்காதவர்கள் அகராதியில் கலக்க மாட்டார்கள் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கை. ஆகவே உற்றார் உறவினர்கள் அனைவரும் தவறாமல் யுகாதி பண்டிகை அன்று அவர்களின் சொந்த பந்தங்களோடு புத்தாடைகள் அணிந்து வெகு விமரிசையாக யுகாதி பண்டிகையை கொண்டாடுவார்கள். தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி அன்று காலை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து இஷ்ட தெய்வங்களை வழிபடுவார்கள்.

அதேபோல் முன்னோர்களுக்கு படையலிட்டு புத்தாடைகள் வைத்து படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் வெள்ளம், வேப்பிலை, தேங்காய், மிளகு, பச்சை மிளகாய், சீரகம், மாங்காய் உள்ளிட்ட ஏழு வகையான பொருட்களை ஒன்று சேர்த்து உறவினர்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று வழங்குவார்கள். யுகாதி பண்டிகை என்று இனிப்பும், கசப்பும் துவரும் சேர்ந்து உண்டால், அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கை.

The post ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் யுகாதி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Yugadi ,Andhra ,Telangana ,Andhra state ,Kolagala ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து