×

வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது

*விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு : வருசநாடு முத்தாலம்பாறை ஊராட்சியில் மழை காலங்களில் ஓடைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீரை தேக்கிவைக்கும் வகையில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வருசநாடு அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்டது அருகுவேலி கிராமம். இந்த கிராமத்தின் வழியாக சிறிய ஓடைகள் செல்கின்றன. மழை காலங்களில் இந்த ஓடைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், ஓடைகளில் வரும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இதனால் கோடை காலங்களில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்து வந்தனர். எனவே இங்குள்ள ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமென விவசாயிகள் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனை தொடர்ந்து ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஒரு ஓடையில் தடுப்பணை பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும்சி ஓடைகளில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அருகுவேலி கிராம விவசாயிகள் கூறுகையில், “மழைக் காலங்களில் கிராம ஓடைகளில் தண்ணீர் அதிகளவில் செல்லும். இதனால் சில இடங்களில் மண் அரிப்பு, பாதிப்புகள் ஏற்படும். ஓடை நீரை தேக்கி வைக்க வழியின்றி பல ஆண்டுகளாக பரிதவித்து வந்தோம். எனவே தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

தற்போது முக்கிய ஓடையில் தடுப்பணை கட்டும் பணி முடிந்து விட்டது. இதில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் இந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை காலத்திலும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எங்களது பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்’’ என்றனர்.

The post வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Aruguveli ,Muthalampara Uratchi ,Varasanadu ,Dinakaran ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா