*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஊட்டி : ரோஜா பூங்காவில் பெரும்பாலான பாத்திகளில் இன்னும் மலர்கள் பூக்காத நிலையில்,சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு செல்வது வழக்கம்.இதனால், இவ்விரு பூங்காக்களையும் தோட்டக்கலைத் துறையினர் சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர்.
ரோஜா பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும்.இதற்காக டிசம்பர் மாதமே இப்பூங்காவை தயார் செய்யும் பணி துவக்கப்படும். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படும்.தொடர்ந்து உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு மேல் மலர்கள் பூத்து விடும். ஆனால், இம்முறை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மழை பெய்யாத நிலையில், செடிகள் வளர்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், இதுவரை மலர்கள் பூக்காமல் உள்ளது. ஓரிரு பாத்திகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது.முதல் மற்றும் இரண்டாம் பாத்திகளில் மலர்கள் பூக்கவில்லை. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இம்முறை மே மாதமே ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ரோஜா கண்காட்சி நடத்தப்படவில்லை. எனவே, மே மாதம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளே ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்லலாம்.
The post மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம் appeared first on Dinakaran.