கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடுகள் சாலை, தேயிலை தோட்டங்களில் உலா வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை தட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த தருமன் என்பவர் தனது மனைவியுடன் கோத்தகிரி நகர் பகுதிக்கு தனது காரில் வந்துள்ளார். அப்போது, கார் சக்கத்தா மாரியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு மாடு திடீரென சாலையை கடக்க முயன்றது.
தொடர்ந்து தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டு மாடு சாலையில் குதித்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் பயணித்த காரின் மீது குதித்தது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், காரின் முன்பக்க கண்ணாடி, மேற்கூரை பகுதி சேதமடைந்தது. பின்னர், மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் ஓடி சென்றது.
இது குறித்து கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது போன்று சாலை, தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உலா வரும் காட்டு மாடு கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோத்தகிரி அருகே காட்டு மாடு சாலையை கடக்க குதித்ததில் கார் சேதம் appeared first on Dinakaran.