×

வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி

*மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர் : வேலூர் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்ட பிறகு பாதாள சாக்கடை திட்டம் பழைய மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் முதல்கட்டமாக முடிவடைந்துள்ளது. ஆனாலும், நகரில் பல தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டு வரும் அடைப்பு பிரதான சாலைகள் வரை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக காட்பாடி சாலையிலும், பெங்களூரு சாலையிலும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி அங்குள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும் மக்களையும், சுமை தூக்கும் தொழிலாளர்களையும் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்க வைத்துள்ளது. காட்பாடி சாலையில் தபால் அலுவலக கட்டிடம் தொடங்கி நாராயண ரெட்டியார் திருமண மண்டபம் வரையும், தபால் அலுவலகம் சந்து, பேலஸ் கார்னர் கள்ளுக்கடை சந்து தொடங்கி பெங்களூரு சாலையை ஒட்டியுள்ள மண்டிகள் அமைந்துள்ள சிறிய சந்துகள் வழியாக வரும் கழிவுநீர் கால்வாய் பெங்களூரு சாலை வரை வருகிறது.

இதில் வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுகள் கால்வாயில் சேர்ந்து ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி மாதக்கணக்கில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், கடைகள், மண்டிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.

இதை சீரமைப்பதாக கூறி சாலையின் குறுக்கே செல்லும் கல்வெர்ட்டுகளையும் பெயர்த்து எடுத்து அங்கேயே போட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காட்பாடி சாலையின் அகலமும் குறுகி போயுள்ளது.எனவே, மாநகராட்சி நிர்வாகம் காட்பாடி சாலை மற்றும் பெங்களூரு சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாய் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Vellore Katpadi road ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...