*சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்களில் புதிய மண் கொட்டப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை சீசன் நெருங்கிய நிலையில்,நீலகிரியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மலர் கண்காட்சி நடத்தப்படும் ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரித கதியில் நடக்கிறது.
மலர் கண்காட்சிக்கு ஒன்றரை மாதமே உள்ள நிலையில் பூங்காவில் அனைத்து பாத்திகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.அதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அவைகள் பராமரிக்கப்பட்ட வருகிறது. மேலும், பூங்காவில் பெரிய,சிறிய மற்றும் பெர்ன் புல் மைதானங்களையும் பராமரித்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோடை சீசனின் போது, பச்சை பசேல் என காட்சியளிக்கும் வகையில் புல் மைதானங்களை தயார் செய்யும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பூங்காவில் உள்ள சிறிய புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.நேற்று சிறிய புல் மைதானத்தில் மண் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், பூங்காவில் உள்ள புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே உள்ள இருக்கைகள் மற்றும் இத்தாலியின் பூங்கா பகுதியில் உள்ள புல் மைதானங்களில் அமர்ந்து செல்கின்றனர்.
The post தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம் appeared first on Dinakaran.