×

காலையிலேயே களமிறங்கும் வேட்பாளர்கள் குமரியில் சூடுபிடித்த தேர்தல் பிரசாரம்

*செண்டை மேளத்துடன் வீதிகளில் வலம் வரும் கட்சி தொண்டர்கள்

நாகர்கோவில் : பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். செண்டை மேளத்துடன், அவர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் களமிறங்கி உள்ளனர்.தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 17ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் ஒர வாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

போதிய நாட்கள் இல்லாத நிலையில், எல்லா பகுதிகளுக்கும் செல்வது வேட்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கி உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தான் தீவிர பிரசாரத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்ய போதிய கால அவகாசம் இல்லை. காலை 8 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.
ஆனால் குமரி மாவட்டத்தில் வெயில் கொடுமை வாட்டி வதைத்து வருகிறது. காலை 9 மணிக்ேக சூரியன் சுட்டெரிக்கிறது. இதனால் கடும் வெப்பத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இதனால் பிரசார வாகனம் சென்றாலும், மக்கள் வெளியே வருவது சிரமமாக உள்ளது.

மேலும் வெயில் காரணமாக வேட்பாளர்களும் சோர்வடைந்து விடுகிறார்கள். அவர்களும் வரும் தொண்டர்களும் உற்சாகமிழந்து விடுகின்றனர். முக்கிய சந்திப்புகளில் அந்தந்த கட்சி நிர்வாகிகளின் தகுதிக்கேற்ப தொண்டர்களை திரட்டி கொண்டு வந்து பிரசாரத்தில் நிற்க வைக்கிறார்கள். குறிப்பாக ஆண்களை விட, பெண்கள் ஆங்காங்கே அந்தந்த கட்சியின் கொடிகளை பிடித்துக் கொண்டு நிற்பதை காண முடிகிறது. கிராம பகுதிகளுக்குள் சென்றால் நேரம் போதுமானதாக இருக்காது என்பதால், நகர பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

தங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட அந்தந்த அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் செண்டை மேளத்தை வாடகைக்கு பிடித்துக் கொண்டு தங்களது கட்சி கொடிகளுடன் வீதி, வீதியாக சென்று வருகிறார்கள். பொதுமக்கள் வெளியே வர வில்லை என்றாலும் கதவுகளை தட்டி, மறக்காமல் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்கள் என கேட்கிறார்கள். மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளின் இல்லங்களையும் விட்டு வைப்பதில்லை. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விஜய் வசந்த் மீண்டும் களமிறங்கி உள்ளார். அவரது தந்தை வசந்தகுமார், 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனால் கொரோனா கால கட்டத்தில் அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, 2021 ல் நடந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் எம்.பி. ஆனார். நான் பார்ட் டைம் எம்.பி. என்கிறார்கள். நான் முழு நேர எம்.பி.யாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்று அவர் பிரசாரத்தில் பேசி வருகிறார்.

பாரதிய ஜனதா சார்பில் 10 வது முறையாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் களமிறங்கி உள்ளார். ஏற்கனவே ஒன்றிய அமைச்சராக இருந்த போது ரூ.45 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை தந்துள்ளேன். பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலத்தை எண்ணி பாருங்கள். தொகுதி வளர்ச்சி அடைய எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு வருகிறார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் பசிலியான் நசரேத், மீனவ பிரதிநிதிக்கு இதுவரை யாரும் வாய்ப்பு தந்தது இல்லை. அதிமுக தான் மீனவ சமூகத்தை சேர்ந்த என்னை வேட்பாளராக்கி உள்ளனர். எனவே நான் வெற்றி பெற்றால் மீனவர்கள் வெற்றி பெற்றதாக அமையும். எனவே எனக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு வருகிறார்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர், வெளிநாட்டில் பார்த்த வேலையை உதறி விட்டு, அரசியலுக்கு வந்து உள்ளேன். புதிய முகத்துக்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு பிரசாரம் செய்கிறார். இன்னும் ஒரு வாரமே இருப்பதால், எப்படியாவது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வாக்காளர்களை கவரும் வகையில் யுக்திகளை வேட்பாளர்கள் கையிலெடுத்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் பிரசாரத்துக்கு இன்னும் முக்கிய தலைவர்கள், நட்சத்திரங்கள் வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி கன்னியாகுமரி அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை. கடந்த 5ம்தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குமரி மாவட்டம் வருவதாக இருந்தது. அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.

நடிகை குஷ்பூ, பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு வருவார் என அறிவித்திருந்தனர். ஆனால் குஷ்பூ பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார். பா.ஜ.வுக்கு ஆதரவு திரட்ட ஒன்றிய அமைச்சர்கள் சிலர், இன்னும் 2, 3 நாட்களில் பிரசாரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசினார். கனிமொழி எம்.பி., கடந்த வாரம் பிரசாரம் செய்தார்.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவுக்கு ஆதரவாக நாகர்கோவில் நாகராஜா திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். நடிகர்கள் சிங்கமுத்து, காயத்ரி ரகுராம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். இனி அந்த கட்சியில் பிரபல பேச்சாளர்கள் யாரும் இல்லை.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அதிமுகவுக்கு ஆதரவாக வரும் 11ம் தேதி பிரேமலதா வர உள்ளதாக கூறி உள்ளனர். இனி வரும் நாட்களில் வேறு நட்சத்திரங்கள், தலைவர்கள் வருவார்களா? என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.

மவுசு இல்லாத சுயேட்சை வேட்பாளர்கள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களில் அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்களின் பிரசாரத்தை மட்டுமே பெரிய அளவில் காண முடிகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரம் பெரிய அளவில் இல்லை.ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் சமூக வலை தளங்களில் பிரசார பதிவுகளை வெளியிட்டு வாக்கு கேட்டு வருகிறார்கள். ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் பிரசாரத்தை செய்கிறார்கள். இருப்பினும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லை. மக்களும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரத்தை பெரிதாக கண்டு கொள்ளாத நிலை உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

வேட்பாளர்களின் பிரசாரம் வீடியோ பதிவு

* பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், வேட்பாளர்களின் பிரசாரத்தை தேர்தல் பறக்கும் படையினரும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

* முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பிரசாரத்தை கண்காணிப்பு குழுவினர் வீடியோ பதிவு செய்கிறார்கள்.

* பிரசாரத்தில் எத்தனை கார்கள் வருகின்றன. கொடிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்கிறார்கள். இந்த விபரங்கள் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

* அனுமதி இல்லாத இடத்தில் பிரசாரம் செய்தால், தேர்தல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.

The post காலையிலேயே களமிறங்கும் வேட்பாளர்கள் குமரியில் சூடுபிடித்த தேர்தல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,sentai melam ,Nagercoil ,Sendai ,Melam ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்