×

அக்னி நட்சத்திர காலம் துவங்கும் முன்பே தென்மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்

*புழுங்கி தவிக்கும் மக்கள்

நெல்லை : அக்னி நட்சத்திரம் துவங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதே தென்மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. பாளையங்கோட்டை, ஈரோடு, வேலூர், சென்னை, சேலம், மதுரை, திருச்சி, வேலூர் போன்ற பல மாவட்டங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியும் பதிவாகி வருகின்றது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவாகத் துவங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பகல் பொழுதில் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. பகலில் மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. பாளையங்கோட்டையில் நேற்று அதிகபட்சமாக 101.84 டிகிரி வெப்ப நிலை பதிவானது.

பணி நிமித்தமாக வெளியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் வெப்பத்தின் கடுமையால் கடும் நாவறட்சி, உடல் சூடால் அவதிப்படுகின்றனர். கொளுத்தும் வெயில் காரணமாக சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், பதநீர், நுங்கு, தர்பூசணி, பழஜூஸ், கூழ், கரும்புச்சாறு கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களில் இவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

உள்ளூர் இளநீர் ரூ.30க்கும், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இளநீர் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடும் வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் லெமன் ஜூஸ், கரும்புச்சாறு போன்ற பானங்களை வாங்கி அருந்துகின்றனர். பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் சில்லரை கடைகளில் ஒரு எலுமிச்சம் பழம் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டத்தின் ஒரு சிலபகுதிகளில் கோடை மழை பெய்தாலும் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தை அவை தணிக்கும் அளவிற்கு இல்லை. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும்போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியன் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறான். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் 2 வாரங்களில் சூரியன் பயணிக்கும்போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்று ஜோதிடர்கள் கூறுவர்.

அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் பகுதி நாட்களை மக்கள் பின் ஏழு, முன்னேழு என கூறி கணக்கிடுவது வழக்கம். இது வழக்கமாக மே மாதம் 4ம் தேதி முதல் 29ம் தேதி வரை கணக்கிடப்பட்டு அக்னி நட்சத்திர காலமாக கருதப்படும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலம் துவங்க இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

The post அக்னி நட்சத்திர காலம் துவங்கும் முன்பே தென்மாவட்டங்களில் கொளுத்தும் வெயில் appeared first on Dinakaran.

Tags : Agni Nakshatra ,Tamil Nadu ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு...