கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலத்துக்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் வன்முறையை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரபிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகவும், மகாராஷ்ட்ராவில் 5 கட்டங்களாகவும், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகளிடையே வன்முறை அடிக்கடி வெடிக்கிறது என்பதால் அங்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை தேர்தல் பணிக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. 170 துணை ராணுவக் குழுக்கள் பணியில் ஈடுபடும் நிலையில் மேலும் 100 குழுக்களை அனுப்ப ஆணையிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் சமயத்தில் வன்முறை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், மக்கள் பாதுகாப்பை பலப்படுத்தவும் தேர்தல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. மற்றொருபுறம் இது அரசியல் ரீதியாக திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே போராக வெடித்துள்ளது.
மேற்குவங்கத்தில் என்ஐஏ, அமலாக்கத்துறை குழுக்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது. அதே சமயம், மம்தா பானர்ஜி அரசு, என்ஐஏ குழுவை சேர்ந்தவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டார்கள் என வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் என்ஐஏ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தேர்தல் சமயத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் இந்த அமைப்புகளின் தலைவர்களை மாற்ற வேண்டும் எனவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று மாலை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
அதன் பிறகு தேர்தல் ஆணையத்திற்கு முன்பாக அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். பின்னர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு ஒருபக்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் படைகள் அனுப்பப்படுகின்றன. மற்றொரு பக்கம் அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே போர், மூன்றாவதாக ஒன்றிய அரசு மற்றும் மேற்கு வங்க அரசு இடையே உரசல் என பிரச்சனை தொடர்ந்து வருகிறது. ஆகவே மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் சமயத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post தேர்தல் வன்முறையை தவிர்க்க மேற்குவங்கம் மாநிலத்துக்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு..!! appeared first on Dinakaran.