*விவசாயிகள் கவலை
இடைப்பாடி : இடைப்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு, தாக்கு பிடிக்காமல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் பிஞ்சு காய்களுடன் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே அரசிராமணி, தேவூர், சென்றாயனூர், பெரமச்சிபாளையம், வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், புதுப்பாளையம், காவேரிப்பட்டி, செட்டிப்பட்டி, வட்ராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கதளி, நேந்திரம், தேன்வாழை, மொந்தன் வாழை உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்துள்ளனர்.
வயல்களில், தற்போது வாழை தார்விட்டுள்ள தருணத்தில், தேவூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் சுட்டெரித்து வருவதால், வாழை மரங்கள் வாடி வதங்கி, பிஞ்சு காய்களுடன் மரம் முறிந்து விழுந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், வாழை காய்கள் விலை குறைவால் பிஞ்சு காய்களை வாங்க, வியாபாரிகள் வாங்காததால் விரக்தி அடைந்த விவசாயிகள், சாய்ந்த வாழை மரங்களை டிராக்டர் ஓட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சென்றாயனூரில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி கூறுகையில், ‘9 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய கதளி ரக வாழை கன்றுகளை, கடந்த 7 மாதத்திற்கு முன்பு 3 ஏக்கரில் சாகுபடி செய்தோம். ஒரு கன்று ரூ.12 வீதம் வாங்கி வந்து, ஏக்கருக்கு ஆயிரம் வீதம், 3 ஏக்கருக்கு 3 ஆயிரம் கன்றுகள் நடவு செய்து பராமரித்து வந்தோம். இதுவரை ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். சாகுபடி செய்து 8 மாதங்கள் ஆன நிலையில், சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் பிஞ்சு காய்களுடன் வாழை மரங்கள் முறிந்து, விழுந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பிஞ்சு காய்களை வாங்க வியாபாரிகள் வாங்காததால் உழவு ஓட்டி அழித்து வருகிறோம்,’ என்றார்.
The post இடைப்பாடி அருகே சுட்டெரிக்கும் வெயிலுக்கு 10 ஆயிரம் வாழை கருகியது appeared first on Dinakaran.