×

கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லூரி பேருந்து மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து

*25 பேர் படுகாயம்: எம்எல்ஏக்கள் நேரில் ஆறுதல்

கள்ளக்குறிச்சி : சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி பேருந்து நேற்று கள்ளக்குறிச்சியில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் சாலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பின்தொடர்ந்து கச்சிராயபாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து எதிர்பாராதவிதமாக தனியார் கல்லூரி பேருந்தின் பின்புறம் மோதியது.

இதில் அந்த கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் அருணா (19), அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில் மகள் கீர்த்தனா (18), முருகன் மகள் விதர்ஷனா (18), கள்ளக்குறிச்சி ஜேஜே நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் சினேகா (19), நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கர் மகள் பூவிழி (18), அதே கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் சுமித்ரா (20), குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த சிங்கராவேல் மகள் சிவநந்தினி (19) மற்றும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கச்சிராயபாளையம் கோகிலவாணி (40), கவுரி (30), கள்ளக்குறிச்சி அரவிந்தன் (28), வெங்கட்டாம்பேட்டை பழனிமுத்து (30), மாதவச்சேரி தினேஷ்கோபி (17), கல்படை ராஜீ (60), கரடிசித்தூர் வளர்மதி (17) மற்றும் 8 மாணவிகள் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்த தகவலறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்து படுகாயமடைந்த பயணிகள் ஆகியோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை முதல்வர் உஷாவிடம் அறிவுறுத்தினார்.

அப்போது தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, திமுக நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர். அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார், அதிமுக மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ஞானவேல் ஆகியோரும் படுகாயமடைந்த மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

The post கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லூரி பேருந்து மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalalakurichi ,Devyakarichi ,Salem district ,Kachyrapalayam ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...