×

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!!

நெல்லை: நெல்லையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று காலையில் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.160 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பிடிபட்டுள்ளன.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே, முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்ததாக அரசு ஒப்பந்ததாரர் முருகன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதன்படி, நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் 4 நாட்களாக சோதனை நடத்தினர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பண உதவி எதுவும் செய்யப்படுகிறதா? என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை சோதனையில், பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில், முருகன் வீடு, அலுவலகத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று காலையில் நிறைவு பெற்றுள்ளது.

The post நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Income Tax ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...