×
Saravana Stores

1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக எடப்பாடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப் படுத்திய எடப்பாடி பழனிச்சாமி தற்போது நீலிக்கண்ணீர் வடிப்பது கபட நாடகம் என ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: 2019ம் ஆண்டு ஜனவரி திங்கள் 25ம் நாள் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப் படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, ‘அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’` என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப் படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இன்றைக்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இப்போது, ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

கலைஞர் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை வழங்கி அரசு ஊழியர் ஆசிரியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளார். இதனை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்றாக அறிவார்கள். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்பது பழனிசாமியின் நோக்கம் அல்ல. திமுகவுக்கு அவர்கள் அளித்தும் வரும் ஆதரவைக் கண்டு பொறுக்கமுடியாமல் அதைக் கெடுக்க வேண்டும் என்று குள்ளநரித் தனமாக, நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்பது ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.

உலகில் எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரே ஒரு கையெழுத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்தார்களே. பெண் பணியாளர்கள், பெண் ஆசிரியர்களைக்கூட வீடுபுகுந்து வந்து கைது செய்து சிறையில் அடைத்த கொடுமைகளை எல்லாம் எல்லோரும் அறிவார்கள். இதைச் செய்ததெல்லாம் அ.தி.மு.க ஆட்சிதானே அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் படிகள் ஏறி வழக்கு தொடுத்து அவர்கள் போட்ட டிஸ்மிஸ் உத்தரவை இரத்து செய்ய வைத்து அத்தனைபேரையும் மீண்டும் பணியில் சேரவைத்த பெருமை திமுகவுக்கு உண்டு.

எப்போது போராட்டம் நடத்தினாலும், அவர்களைக் கைது செய்து வேலை நீக்கம் செய்வது அவர்களுக்கு வாடிக்கை. ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சி அமையும் காலங்களில் பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தண்டனைகளை ரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு வாழ்வளித்து வந்துள்ளதும் திமுக அரசுதான் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989ல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசு தான். ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகளை வழங்கியது கழக அரசு. அவற்றில் பல சலுகைகளை 2001ல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.

அதிமுக அரசு ரத்து செய்த சலுகைகள் அனைத்தையும் 2006ல் மீண்டும் திமுக நடைமுறைப் படுத்தியது. பழனிச்சாமி அரசு ஏற்படுத்திவிட்டுபோன கடன்களால் ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் தடையின்றி நிறைவேற்றிவரும் முதலமைச்சர் ஒன்றிய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறது என்பதுடன் அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும். எனவே, பழனிச்சாமி நீலிக் கண்ணீர் நாடகம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988 வரை குறைவான சம்பளம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக 1989ல் ஊதியங்களை உயர்த்தித் தந்தது திமுக அரசு தான். பல சலுகைகளை 2001ல் அமைந்த அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.

The post 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக எடப்பாடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Edapadi Palanichami ,Civil Servants' Associations ,Civil Servants Associations ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது