×

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் தகுதி நீக்கப்படுவாரா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் பணியில் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. அவர்கள் பயிற்சி பெற்ற இடத்திலேயே தபால் ஓட்டு போட நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே தொகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றும் மையத்திலேயே வாக்களிப்பார்கள். இவர்களுக்கான 3ம் கட்ட பயிற்சி தேர்தலுக்கு முந்தைய நாள் நடைபெறும்.

தமிழகத்தில் நேற்று வரை கணக்கில் காட்டப்படாத ரூ.208.41 கோடி பணம், பரிசு பொருட்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வருமான வரித்துறை மட்டும் ரூ.88.12 கோடி பறிமுதல் செய்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ரூ.99.38 கோடியும் பரிசு ெபாருட்கள் ரூ.15.49 கோடியும், மதுபானம் ரூ.4.53 கோடியும் அடங்கும். மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2,08,59,559 பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இது 33.46 சதவீதம். மீதமுள்ளவர்களுக்கு வரும் 13ம்தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும்.

தாம்பரம் வந்த ரயிலில் பறக்கும்படை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை இரவு சோதனை நடத்தி ரூ.4 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் யாருடையது, யாருக்காக கொண்டு சென்றது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொதுவாக ரூ.1 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள். அதேபோன்று இதுபற்றிய தகவல்களும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணம் குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்காக எடுத்து செல்லப்பட்டதா? என தேர்தல் செலவின பார்வையாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்களும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையத்துக்கு முழு தகவல்களைதெரிவிப்பார்கள். குறிப்பிட்ட வேட்பாளருக்கு பணம் எடுத்து சென்றதாக தெரியவந்தால், அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்குச்சாவடி மையங்களில் வெயில் தாக்கத்தை குறைக்க குடிநீர், சாமியானா, நாற்காலி, தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஏப்ரல் 19க்கு பிறகும் தேர்தல் நடத்தை விதிமுறை தொடரும்
தமிழகத்தில் வரும் 19ம்தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்பும் ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். பக்கத்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 4ம் தேதி வரை நீடிக்கும். அதேநேரம் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும், பறக்கும் படை எண்ணிக்கை சட்டமன்ற தொகுதிக்கு 3 என்று இருப்பதை ஒன்றாக குறைக்க வாய்ப்புள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

* பறக்கும் படை மீது நடவடிக்கை
பறக்கும் படையினர் முறையாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யவில்லை என புகார் வந்தால் அவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே சில இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாகனங்களுக்கு டீசல் வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் தொகுதியில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்த துணை ராணுவ வீரர் விபத்தில் இறந்து விட்டார். அவரது உடல் விமானம் மூலம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோன்று நாமக்கல் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒரு ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கான உதவித்தொகையை தேர்தல் ஆணையம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் தகுதி நீக்கப்படுவாரா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,BJP ,Nayanar ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Nayanar Nagendran ,Tirunelveli ,Tambaram ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...