×

இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து கேட்டால் கச்சத்தீவு பற்றி பேசி திசை திருப்பும் பாஜ: கனிமொழி எம்பி பேட்டி

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தபோது, அதிமுக எம்பிக்கள் ஆதரித்து வாக்களித்தது ஏன் என்பதற்கு முதலில் அவர்கள் பதில் அளிக்க வேண்டும். திமுக எம்பிக்கள் 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் மவுனமாக இருந்தார்கள் என்று அண்ணாமலை கூறுவதில் உண்மை இல்லை. நாங்கள் மவுனமாக இருந்தோம் என்றால் ஏன் எங்களை மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சி எம்பிக்களையும் சஸ்பெண்ட் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கோ, விவாதங்கள் செய்வதற்கோ பாஜ அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறி வந்தோம். இதனால் பாஜ எங்களை அடிக்கடி சஸ்பெண்ட் செய்தது. கச்சத்தீவு பிரச்னையில் திமுக அமைதியாக இல்லை. முதல்வர் அந்தப் பிரச்னைக்கு மிகத் தெளிவாக பதில் கூறி இருக்கிறார். பாஜ அரசு 10 ஆண்டுகள் அமைதியாக இருந்தனர். நாங்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை கச்சத்தீவு பிரச்னை குறித்து கேள்விகள் எழுப்பி இருக்கிறோம்.

அதற்கு அவர்கள் பதில் கூறியதே கிடையாது. பிரதமர் மோடியும், மற்ற அமைச்சர்களும் பேசவில்லை. பிரதமர் பலமுறை இலங்கைக்கு போய் வந்திருக்கிறார். அப்போது கூட அந்த நாட்டு அரசிடம் அதுகுறித்து பேசவில்லை. இப்போது தேர்தல் வந்ததும், அதுவும் இந்தியா சீனா எல்லையில் உள்ள பிரச்னைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத் தொடங்கியதும், அதை திசை திருப்புவது போல் இந்த கச்சத்தீவு பிரச்னை பற்றி பேசுவது நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜவின் பிரசாரம். இதில் மக்களுக்கான நன்மையை செய்யும் திட்டம் பாஜவுக்கு இல்லை. இவ்வாறு கனிமொழி கூறினார்.

The post இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து கேட்டால் கச்சத்தீவு பற்றி பேசி திசை திருப்பும் பாஜ: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,China ,BJP ,Kanimozhi ,DMK ,Deputy General Secretary ,Kanimozhi MP ,Chennai ,Thoothukudi ,Union government ,Parliament ,AIADMK ,
× RELATED சொல்லிட்டாங்க…