×

பிரதமர் மோடி 10 முறை வந்தாலும் டெபாசிட் கூட பாஜ வாங்க முடியாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட அவைத்தலைவர் இனியரசு, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பேரூர் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி உறுதியாகிவிட்டது. இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் வழிகாட்டியாக நமது முதல்வர் செயல்படுகிறார். காலை உணவு திட்டம் இப்பொழுது கனடா நாட்டிலும் செயல்பட்டு வருகிறது. ஐநா சபையில் மோடியை கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை மோடி 4 முறை வந்துள்ளார். இன்னும் 5 முறை வர உள்ளார். 10 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜ டெபாசிட் கூட வாங்க முடியாது. என்ன செய்தார் ஸ்டாலின் என எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நான் பதில் அளிக்கிறேன், பெண்களுக்கு உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், இலவச பேருந்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறார். என்ன செய்தார் ஸ்டாலின் என்று கேட்கும் எடப்பாடி, நீ இதை செய்தாயா.

இப்பொழுது பிரசாரத்தின் போது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக பெண்கள் அதிகம் கூட்டம் சேருவது என்றால், அது உதயநிதி ஸ்டாலினுக்குதான். இதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை எடப்பாடிக்கு. மோடி ரயில் மற்றும் விமானத்தில் பணம் எடுத்து வந்தால் என்னைப் போன்று உயிரோடு உள்ளவர்கள் இருக்கும் வரை உங்களை சும்மா விடமாட்டோம் என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ல் ரூ.570 கோடி கன்டெய்னர் லாரியில் நடுரோட்டில் கிடந்தபோது அதை பறிமுதல் செய்து உங்களிடம் ஒப்படைத்தோம். சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் 8 ஆண்டுகள் ஆகிறது.

இதுவரை அந்த பணம் யாருடையது என்பது தெரியவில்லை. இது உங்களுடைய பணமா என்ற சந்தேகம் இப்போது ஏற்படுகிறது. பாஜவினர் யாராவது பணம் எடுத்து வந்தாலும் தைரியமாக அதை அடித்து பிடுங்குங்கள், எத்தனை வழக்கு போட்டாலும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி ரவிக்குமார் டைகர் குணா, நிர்வாகிகள் வரதராஜன், முரளி, நிர்மல் குமார், நாகப்பன், குமுதம் மதுரை, பாஸ்கர், செல்வம், புருஷோத்தமன், பாரத், பால்ராஜ், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் எழில் கரோலின், தமிழினி, சங்கர், எல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பிரதமர் மோடி 10 முறை வந்தாலும் டெபாசிட் கூட பாஜ வாங்க முடியாது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,BJP ,RS ,Bharati ,DMK ,Selva ,Kanchipuram ,Chittamur Junction ,Maduranthakam ,Kanchi South District ,K. Sundar ,MLA ,Seyyur ,Modi ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...