×

வெறும் 2999 புகார்கள் மட்டுமே வந்துள்ளது: முறைகேடுகளை அம்பலப்படுத்தும் சிவிஜில் செயலி; தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் புகார்கள் குறைவு

தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிவிஜில் செயலியில் புகார்கள் குறைவாகவே பதிவாகியுள்ளது, வெறும் 2999 புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் பிரச்னை இல்லாத மாநிலமாக உள்ளது. இருப்பினும் முந்தைய தேர்தல்களில் அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் பிடிபட்ட காரணத்தால் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் மிகுந்த மாநிலமாக கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு வாக்குக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தேர்தல் விதிகளை மீறியதாக ஆங்காங்கே புகார்களும் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது.
எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியம்.

இந்நிலையில் நாட்டின் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மிக முக்கியமான பணியை தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தேர்தலை நடத்தும்போது, அதில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறக் கூடாது என்பதற்காக, பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி தேர்தல் விதிகளை மீறும் எந்தவொரு நபரும் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்.

மேலும் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்க சி-விஜில் (cVIGIL) என்ற செயலியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்து அனுப்பலாம். சிவிஜில் என்பது பயனர் நட்பு மற்றும் எளிதில் செயல்படக்கூடிய செயலியாகும். இது விழிப்புடன் இருக்கும் குடிமக்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை, தேர்தல் அதிகாரி மற்றும் பறக்கும் படைக் குழுக்களுடன் இணைக்கிறது. இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் அரசியல் முறைகேடு சம்பவங்கள் குறித்து உடனடியாக தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு செல்லாமல் நிமிடங்களில் புகார் செய்யலாம்.

சி-விஜில் செயலியில் புகார் அனுப்பப்பட்டவுடன், புகார்தாரர் தனிப்பட்ட ஐடியைப் பெறுவார், அதன் மூலம் அந்த நபர் தனது மொபைலில் புகாரைக் கண்காணிக்க முடியும். அதில் அனுப்பக்கூடிய புகார்கள், தகவல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பப்படும். அதன் உண்மைத் தன்மையை குறித்து அவர் ஆராய்ச்சி செய்வார். அந்த வகையில் நேற்று காலை நிலவரப்படி தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலி மூலம் தமிழகத்தில் மட்டும் 2,999 புகார்கள் பதிவாகியுள்ளன. சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் 331 புகார்கள் பதிவாகியுள்ளன.

அதேபோல சில மாவட்டங்களிலிருந்து ஆதாரங்களுடன் புகார்கள் ஏதும் வரவில்லை. தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவான புகார்களே பதிவாகியுள்ளன. எனவே தேர்தல் விதிமீறல் தொடர்பான நிகழ்நேர புகார்களை சி-விஜில் செயலி மூலம் தமிழக மக்கள் அதிகளவில் அளிக்க வேண்டும். இதில் புகார் அளித்தவர் பெயர் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. எனவே பொதுமக்கள் பயமின்றி தாங்கள் காணும் விதிமீறல்களை சி-விஜில் செயலியில் பதிவு செய்து விவரங்களை அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post வெறும் 2999 புகார்கள் மட்டுமே வந்துள்ளது: முறைகேடுகளை அம்பலப்படுத்தும் சிவிஜில் செயலி; தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் புகார்கள் குறைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையத்தை நம்பமுடியல..திடீரென...