×

உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு… அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை: ரவுண்டு கட்டி தாக்கிய பாஜவினர்

கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. வேட்பாளர் அண்ணாமலை, தொகுதிக்குள் பிரசாரத்துக்கு செல்லும்போதெல்லாம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சர்ச்சையில் சிக்கி வருகிறார். மக்கள் இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு, கடந்த பத்து நாட்களாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடக்கிறது. இந்நிலையில், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை நேற்று முன்தினம் மாலை பிரசாரம் மேற்கொண்டார். பல்லடம் அருகே உள்ள பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் அவர் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த விசைத்தறியாளர் ஒருவர்,“கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறீர்கள். உங்களது தவறான பொருளாதார கொள்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காணரமாகத்தான், எங்களது விசைத்தறி தொழில் நலிவடைந்து விட்டது. நாங்கள், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கிறோம். பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்’’ என்றார்.

இதைக்கேட்டதும், அண்ணாமலை பிரசார வாகனத்தை சுற்றிருந்த பாஜவினர் கடுப்பாகிப்போயினர். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலையும் கடுப்பாகினார். ஆனாலும், கண்டும், காணாததுபோல் இருந்தார். அடுத்த சில நொடிகளில், பாஜ குண்டர்கள், அந்த விசைத்தறியாளரை சுற்றிவளைத்து “தலைவர் பிரசாரம் செய்யும்போது பேசாம… கேட்கணும், எதிர்கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது’’ கைகளால் பட்… பட்…டென அடித்து, அந்த நபரை அங்கிருந்து வெளியே தள்ளிகொண்டு சென்றனர். தாக்குதலுக்கு உள்ளான அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும். அதே பகுதியை சேர்ந்வர்தான். ஆனால், அவர், தனது பெயர் விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேநேரம், “உண்மையைத்தான் சொன்னேன். நான், சொன்னால், இவனுங்களுக்கு கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வருது’’ எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பா.ஜ.க.வினரின் இந்த அராஜக செயலால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசு
பல்லடம் அருகே தெற்கு பாளையம் என்ற கிராமத்தில் தேர்தல் பரப்புரைக்காக தனது வாகனத்தில் அண்ணாமலை சென்றபோது அங்கிருந்த விவசாயி ஒருவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக அளித்தார். அதை ஆசையோடு வாங்கிக் கொண்ட அண்ணாமலை `இந்தக் குட்டியை தாயிடமே சேர்த்து விடுங்கள். இப்போது உங்களிடம் தருகிறேன் பின்னர் நான் மீண்டும் வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறி அந்த விவசாயியிடமே ஆட்டுக்குட்டியை திருப்பிக் கொடுத்தார்.

* ரூ.4 கோடி பறிமுதல்: ஒரே வார்த்தையில் முடித்த அண்ணாமலை
பாஜ மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை சரவணம்பட்டி பகுதியில் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தொடர்புபடுத்தி ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சதி வேலை செய்து, தனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு அந்த விவகாரத்தில் பேசுவதற்கு எதுவும் இல்லை. தேர்தல் ஆணையமும், பறக்கும் படையினரும் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு பொறுமை அவசியம். நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்பினால் தோல்விகளை ஏற்றுக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டும். பகுதி நேரமாக அரசியலில் ஈடுபட்டு கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக வேட்பாளர் எனது பிரசார வாகனத்தை சிறை பிடித்ததாக கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அந்த வாகனத்தில் நான் இல்லை. வெறும் டயரை சுற்றி தான் அவர்கள் அமர்ந்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடத்தில் நாங்கள் செல்லவில்லை.

வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். மற்றவர்கள் காசு கொடுக்கிறார்களா? இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் வேலை. தமிழக தேர்தல் ஆணையம் பாஜவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற கருத்து பொய்யானது. பாஜவின் விளம்பரங்களுக்கு அவர்கள் அனுமதி அளிப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. நீதிமன்றத்திற்கு சென்று நாங்கள் அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பொதுவாக ஒரு விவகாரத்தை கையில் எடுத்தால் பல கதைகள் சொல்லும் அண்ணாமலை, பாஜ வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்ட விவகாரத்தில் கப்சிப் என அடங்கி பேட்டியளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* திமுகவைக் கண்டு எடப்பாடிக்கு பயம்: டிடிவி ‘சுளீர்’
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் அண்ணாமலையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கோவை ஒலம்பஸ் 80 அடி சாலையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டி.டி.வி தினகரன் பேசியதாவது: நாங்கள்தான் அம்மாவின் உண்மையான கட்சி. எங்களிடம் தான் அம்மாவின் சின்னம் இருக்கிறது என தம்பட்டம் அடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது எங்கள் கூட்டணி கட்சிகள் மோடியை பிரதமர் வேட்பாளர் என கூறி ஓட்டு கேட்பார்கள். ஆனால், பழனிசாமி தமைமையிலான கூட்டணிக் கட்சிகள் யாரை பிரதமராக சொல்லி ஓட்டு கேட்பார்கள்?. எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுகவைக் கண்டு பயம். பழனிச்சாமி மீது கொடநாடு வழக்கில் மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

‘கொங்கு கோட்டையில் திமுக கூட்டணி வெல்வது நிச்சயம்’: அமைச்சர் முத்துசாமி
1. கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்த திமுக தேர்தல் வாக்குறுதியை இந்தாண்டிற்கான சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை கூறுகிறாரே?
சர்வதேச கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது மிகப்பெரிய திட்டமாகும். இளைஞர் விளையாட்டில் மெருகேற்ற அவர்களே கேட்கும் திட்டமாகும். இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு சென்றவுடன் அதனையும் செய்வோம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்பட்டது இளைஞர்களின் கல்வி திறன் மேம்படுத்த அறிவிக்கப்பட்ட திட்டமாகும். மேலும், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்த பின்னர், அதிகப்படியான விளையாட்டுத்திடல்கள் அமைத்து வருகிறார். விளையாட்டுத்துறை வீரர்கள் தங்களை கேட்கும் திட்டத்தினை முதல்வர் அறிவித்தது நகைச்சுவை என அண்ணாமலை கூறினால், அது தான் நகைச்சுவை என கூறுவேன். தேர்தல் வாக்குறுதியில் சொன்னது மட்டுமின்றி செல்லாத திட்டங்களையும் செய்து முடிப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2. நீட் தேர்வு ரத்து என்னும் பொய் பிரசாரம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது முதல்வரின் நோக்கம். அந்த தேர்வு மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் கட்டாயம் நீட்டை ரத்து செய்வோம் என முதல்வர் கூறுகிறார். அதன்படி, ஒன்றிய அரசில் இந்தியா கூட்டணி வந்தவுடன் இந்த தேர்வை ரத்து செய்வதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். அப்போது, நீட் தேவை ரத்து செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். எனவே கட்டாயம் நோபல் பரிசு அவருக்கு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியே அதற்கு பரிசீலனை செய்வார்.

3. காலை உணவு திட்டமே, புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள அம்சம் தான் என அண்ணாமலையின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
நாங்கள் திட்டத்தில் வைத்துள்ளோம்; கொள்கையில் வைத்துள்ளோம் என கூறும் அண்ணாமலை எங்கு செய்தார்கள்? எப்போது செய்தார்கள்? என்பதை அவரிடமே நான் கேட்கும் கேள்வி. இந்தியாவிலேயே முதன்முதலில் காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட்டது. பிற மாநிலங்களிலும் இந்த திட்டத்தை பின்பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் தான் நாங்கள் செய்கிறோம் என தெரிவிக்கின்றனர். இதில் அரசியலோ, பெருமையோ கிடையாது. பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதை மனதார புரிந்து கொண்டு முதல்வர் செய்து இருக்கின்றார். இதன் மூலம் குழந்தைகள் பள்ளி வருகை என்பது கூடியுள்ளது. இதனை விமர்சனம் செய்வது அர்த்தமில்லாத ஒன்று.

4. கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிகளின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை கைப்பற்றியே தீருவோம் என பாஜகவினர் சூளுரைப்பது அவர்கள் நினைப்பது போல் களத்தில் இல்லை. உண்மையாகவே, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த மூன்று வருடத்தில் செய்த மக்களுக்கு செய்த திட்டங்கள் கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய எழுச்சியை மக்கள் திமுக கூட்டணி தருகின்றனர். குறிப்பாக, விடியல் பயணம், புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை என பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. நிச்சயமாக திமுக கூட்டணி வரலாற்றில் இல்லாத வகையில் வாக்குகளை பெற்று கொங்கு மண்டலத்தில் வெல்வது நிச்சயம்.

The post உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு… அண்ணாமலையை கேள்வி கேட்ட நபரை: ரவுண்டு கட்டி தாக்கிய பாஜவினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Parliamentary ,Annamalai ,
× RELATED ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை