×

புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம்

சியோனி: ‘புதிய அரசு அமைந்ததும் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களின் வங்கி கணக்குக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் செலுத்தப்படும்’ என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் தனோரா பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: எங்கள் தேர்தல் அறிக்கையில் 4 புரட்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. புதிய அரசு அமைந்ததும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கி கணக்குகளில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சத்தை செலுத்துவோம். இது மாதந்தோறும் சில ஆயிரங்களாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணத்தை இரட்டிப்பாக்குவோம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு வேலையில்லாத இளைஞருக்கும் அரசு மற்றும் தனியார் துறையில் ஒரு வருட பயிற்சி பெறுவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தை கொண்டு வருவோம். இந்த பயிற்சியின்போது, அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, சிறப்பாக செயல்பட்டால், அதே இடத்தில் வேலையும் கிடைக்கும். ஒப்பந்த பணியாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசுத் துறையில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம். பயிர்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்றுவோம். பழங்குடியின மக்களை ஆதிவாசிகள் என்று அழைக்காமல் வனவாசிகள் என பாஜ வேண்டுமென்றே குறிப்பிடுகிறது. ஆதிவாசிகளை அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து வேரோடு பிடுங்கி, நீர், காடு, நிலத்தின் மீதான அவர்களின் முதல் உரிமையை பறிப்பதை பாஜ நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

* அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய ராணுவம் விரும்புகிறது
அக்னிபாத் திட்டம் தொடர்பாக மபி மாநிலம் ஷாடோலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில்,’ அக்னி வீர் திட்டம் பிரதமரால் உருவாக்கப்பட்டது. ஆனால் ராணுவம் இந்தத் திட்டத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீரன் திட்டத்தை ரத்து செய்துவிடும். இந்த திட்டம் நமக்கும் நாட்டுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

* அரசின் கஜானாவை சாமானியர்களுக்காக திறக்கும் நேரம் இது
ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு சில கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடியை ஒரேயடியாக தள்ளுபடி செய்தார் மோடி. இவ்வளவு பணத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற புரட்சிகரமான திட்டத்தை 24 ஆண்டுகளாக நடத்தி இருக்க முடியும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கேட்பவர்கள், இந்த புள்ளிவிவரங்களை உங்களிடமிருந்து மறைக்கிறார்கள். நண்பர்களிடம் கருணை காட்டினாலே போதும். அரசின் கஜானாவை சாமானியர்களுக்கு திறக்கும் நேரம் இது என்றார்.

The post புதிய அரசு அமைந்ததும்: பெண்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்; ராகுல் காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Seoni ,SC ,Tanora ,Madhya Pradesh ,Seoni district ,
× RELATED சொல்லிட்டாங்க…