×

180 சீட்களை தாண்ட முடியாது என்பதால் இந்து-முஸ்லிம் நாடகத்தை கையில் எடுத்துள்ளது பாஜ: காங்கிரசின் தேர்தல் அறிக்கை மீதான விமர்சனத்திற்கு பதிலடி

புதுடெல்லி: காங்கிரசின் தேர்தல் அறிக்கை, சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் அளித்துள்ள பதிலடியில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானதில் இருந்தே, பாஜவினர் மத்தியில் பீதி நிலவுகிறது. பாஜவின் வெற்றி எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. அவர்கள் 180 இடங்களைக் கடக்க போராடி வருவதாக சமீபத்தில் ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி, தனது சாதனைகளை கூறி வாக்கு கேட்க வேண்டிய நிலையில், தற்போது பதற்றமடைந்து மீண்டும் அதே இந்து-முஸ்லிம் நாடகத்தை கையில் எடுத்துள்ளார்.

மோடியின் முஸ்லிம் லீக் மீதான அன்பு ஒன்றும் புதிதல்ல. சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்கள் பக்கம் நின்று, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வகுப்புவாத பிளவை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். 1942ல் மகாத்மா காந்தி அழைப்பின் பேரில் ஒட்டுமொத்த நாடே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கிளர்ந்தெழுந்தது. செய் அல்லது செத்துமடி என சபதம் எடுத்தது. ஆனால், சியாமா பிரசாத் முகர்ஜி அவரது ஒத்த எண்ணம் கொண்ட முஸ்லிம் லீக்குடன் இணைந்து வங்கத்திலும், சிந்து, என்டபிள்யுஎப்பியிலும் அரசை அமைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எவ்வாறு அடக்குவது என்பது குறித்து ஆங்கிலேயர்களுக்கு அறிவுரைகளை கடிதமாக எழுதியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. இவர்கள், முஸ்லிம் லீக் மற்றும் ஆங்கிலேயர்களுடன் ஆழ்ந்த பாசம், அபிமானம் மற்றும் தொடர்பைக் கொண்டிருந்தவர்கள்.

எனவே மோடியின் வார்த்தை ஜால உத்தரவாதங்களை நம்ப நாடு தயாராக இல்லை. நீங்கள் உங்கள் பைகளை மூட்டை கட்ட தயாராகுங்கள். காங்கிரசின் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பரலவாக பேசப்பட்டு வருகிறது. இது நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டம். இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் எங்களை சந்தித்த கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் மற்றும் சவால்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு இந்த நாட்டின் மீது திணித்த ஒவ்வொரு பிரச்னைக்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் தீர்வு உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை மக்களின் குரல், இது இந்தியாவின் குரல். இவ்வாறு கூறினார்.

The post 180 சீட்களை தாண்ட முடியாது என்பதால் இந்து-முஸ்லிம் நாடகத்தை கையில் எடுத்துள்ளது பாஜ: காங்கிரசின் தேர்தல் அறிக்கை மீதான விமர்சனத்திற்கு பதிலடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,Modi ,Muslim League ,Supriya Sreenade ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...