×

காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி பங்கீடு: காங்., தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கில் மொத்தம் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ‘‘மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டாக போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உதம்பூர்,ஜம்மு மற்றும் லடாக் தொகுதிகளில் காங்கிரசும், அனந்தநாக்,ஸ்ரீநகர், பாரமுல்லா தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சியும் போட்டியிடும்’’ என்றார். செய்தியாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உடன் இருந்தார். இந்தியா கூட்டணியில் பிடிபி கட்சியும் இருக்கிறதா என குர்ஷித்திடம் கேட்டபோது,‘‘பிடிபி கட்சி இந்தியா கூட்டணியில் தான் நீடிக்கிறது. கூட்டணியின் ஒரு பகுதிதான் தொகுதி பங்கீடு. ஒட்டுமொத்த கூட்டணி என்பது வேறு விஷயம் ஆகும். ஜம்மு காஷ்மீர் சிறிய பகுதி என்பதால் தொகுதி பங்கீடு விஷயத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது’’ என்றார். காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளுக்கு பிடிபி கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

* தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடி மீது புகார்
காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக புகார் அளித்தனர். அதில், பிரதமர் மோடி தங்களின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் இணைத்து குறிவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடி ராணுவ சீருடை அணிந்த புகைப்படங்கள் பிரசாரத்தில் பயன்படுத்துவதை எதிர்த்தும், கல்லூரி, அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டிருப்பதை அகற்றக் கோரியும் புகார் அளித்துள்ளனர். இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் என காங்கிரஸ் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

The post காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி பங்கீடு: காங்., தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Ladakh ,Congress ,National Conference ,New Delhi ,Jammu and ,Lok Sabha ,National Conference Party ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ்...