×

பஞ்சாப் ஐதராபாத் இன்று பலப்பரீட்சை

முல்லன்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தலா 2 வெற்றி, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் 5வது இடத்திலும், பஞ்சாப் 6வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் அணி தனது முதல் வெற்றியை பெற்ற சொந்தக் களமான முல்லன்பூரில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாகக் களமிறங்குகிறது. புதிய மைதானமான இங்கு நடந்த முதல் ஆட்டத்தில் பஞ்சாப் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

தொடர்ந்து வெளியூரில் விளையாடிய 2 ஆட்டங்களில் பெங்களூரு, லக்னோ அணிகளிடம் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி மண்ணைக் கவ்வியது. ஆனாலும், அகமதாபாத்தில் குஜராத் அணியை சாய்த்தது. 3வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. அதே சமயம், கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணியாக சாதனை படைத்துள்ளது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடமும், 3வது ஆட்டத்தில் குஜராத்திடமும் தோல்வியை சந்தித்த ஐதராபாத், 2வது ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக வரலாற்று வெற்றியும், 4வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை மண்ணை கவ்வவைத்தும் வெற்றியை ருசித்துள்ளது. 3வது வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளதில் ஐதராபாத் 14-7 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* அதிகபட்சமாக ஐதராபாத் 212 ரன், பஞ்சாப் 211 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 119, ஐதராபாத் 114 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஐதராபாத் 3-2 என முன்னிலை வகிக்கிறது.

The post பஞ்சாப் ஐதராபாத் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Punjab Hyderabad ,Mullanpur ,IPL T20 ,Punjab Kings ,Sunrisers ,Hyderabad ,
× RELATED 3வது வெற்றிக்காக இன்று வரிந்துகட்டும் மும்பை-பஞ்சாப்