×

தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக திரிணாமுல் எம்.பி.க்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு: கைது செய்து தூக்கிச் சென்றது போலீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் பூபதிநகரில் கடந்த 2022ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 6ம் தேதி அதிகாலையில் வீடு புகுந்து கைது செய்தனர். அப்போது, அதிகாரிகள் மீது கிராமமக்கள் கும்பலாக தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையை கண்டித்த திரிணாமுல் காங்கிரஸ், மக்களவை தேர்தைலையொட்டி சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலமாக தங்கள் கட்சி நிர்வாகிகளை ஒன்றிய பாஜ அரசு குறிவைப்பதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், திரிணாமுல் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன், தோலா சென், முகமது நதிமுல் ஹக் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். அதில், சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை தலைவர்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். புகாரை அளித்து வெளியேற வந்த திரிணாமுல் எம்பிக்கள், தங்கள் கோரிக்கை வலியுறுத்தி 24 மணி அமைதி தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக கூறி, தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், திரிணாமுல் எம்பிக்களை வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பாக திரிணாமுல் எம்.பி.க்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு: கைது செய்து தூக்கிச் சென்றது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Election Commission ,New Delhi ,National Investigation Agency ,NIA ,Trinamool Congress ,blast ,West Bengal ,Bhupatinagar ,Trinamul ,MPs ,commission ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தலையிட முயற்சி...